ADDED : ஜன 29, 2024 04:41 AM

புதுடில்லி: புதுடில்லி கல்கி கோவிலில் நேற்று நடந்த ஆன்மிக நிகழ்ச்சியின் போது, மேடை சரிந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்; 17 பேர் காயமடைந்தனர்.
புதுடில்லியில் உள்ள கல்கி கோவிலில் நேற்று முன்தினம் மாலை 'ஜாகரன்' ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. சிவராத்திரி போன்று விடிய விடிய நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்று பூஜை, பாடல்கள், நடனங்கள் வாயிலாக வழிபாடு நடத்துவர்.
இந்நிலையில், டில்லி கல்கி கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். நள்ளிரவை தாண்டியும் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.
நிகழ்ச்சி நடந்த முக்கிய மேடைக்கு அருகில் விழா ஏற்பாட்டாளர்களின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்காக, மற்றொரு மேடை அமைத்திருந்தனர். அதிக பாரம் காரணமாக நேற்று அதிகாலை அந்த மேடை சரிந்தது. அதில் இருந்த அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர்.
இந்த விபத்தில் 45 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்; 17 பேர் காயமடைந்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
நிகழ்ச்சி நடத்த முறையான முன் அனுமதி எதுவும் பெறவில்லை என டில்லி தெற்கு போலீஸ் கமிஷனர் கூறினர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.