பைடன் இந்தியா ஆதரவு; மோடி அமெரிக்காவுக்கு ஆதரவு; சொல்கிறார் தூதர் கார்செட்டி
பைடன் இந்தியா ஆதரவு; மோடி அமெரிக்காவுக்கு ஆதரவு; சொல்கிறார் தூதர் கார்செட்டி
ADDED : செப் 24, 2024 07:53 AM

புதுடில்லி: 'அமெரிக்க வரலாற்றில் இந்தியாவுக்கு பெரும் ஆதரவு அளித்த அதிபர் பைடன்; அதேபோல இந்திய வரலாற்றில் அமெரிக்காவுக்கு பெரும் ஆதரவு அளித்த பிரதமர் மோடி தான்' என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு, அவர் அளித்த பேட்டி: இந்தியாவை மிகச்சிறந்த நண்பராகவும், பங்குதாரர் ஆகவும் அமெரிக்கா கருதுகிறது; வேறு எந்த நாட்டுக்கும் செக் வைப்பதற்கான 'கவுன்டர்பேலன்ஸ்' ஆக கருதவில்லை. அமெரிக்க அதிபரும், இந்திய பிரதமரும் மிகச்சிறந்த நண்பர்கள். அமெரிக்க வரலாற்றிலேயே இந்தியாவுக்கு பெரும் ஆதரவு அளித்த அதிபர் என்றால் அது தற்போதைய அதிபர் பைடன் தான். அதே போல இந்திய வரலாற்றிலேயே அமெரிக்காவுக்கு பெரும் ஆதரவு அளித்த பிரதமர் எனில் அது மோடி தான்.
எல்லை பிரச்னை
சீனாவுடன் இந்தியாவிற்கு எல்லை பிரச்னை ஏற்படும் போதெல்லாம் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் தான் நின்று இருக்கிறது. சீனாவுடனான அமெரிக்க உறவுகள் மிகவும் சிக்கலானவை. உலகில் எங்கும் ஆக்கிரமிப்புக்கு வெகுமதி அளிக்கக் கூடாது என்பதை உறுதி செய்ததில் அமெரிக்காவுக்கு நீண்ட வரலாறு உண்டு. இவ்வாறு அமெரிக்க தூதர் கார்செட்டி கூறினார்.

