புடின் வீட்டை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: பிரதமர் மோடி கவலை
புடின் வீட்டை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: பிரதமர் மோடி கவலை
ADDED : டிச 30, 2025 01:37 PM

புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி இருந்தார். இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார். இந்த சூழலில் புடின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: ரஷ்ய அதிபர் புடின் வீடு குறிவைக்கப்பட்டதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது. நடந்துகொண்டிருக்கும் ராஜதந்திர முயற்சிகளே பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை அடைவதற்கான மிகவும் சாத்தியமான வழியாகும்.
சம்பந்தப்பட்ட அனைவரும் இந்த முயற்சிகளில் கவனம் செலுத்துமாறும், அவற்றைச் சீர்குலைக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைகளையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

