டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை பெங்களூரில் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை பெங்களூரில் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
ADDED : ஆக 11, 2025 03:38 AM

பெங்களூரு: ''புதிய இந்தியாவின் எழுச்சியின் அடையாளமாக பெங்களூரு மாறி வருகிறது. 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றிக்கு பெங்களூரின் பங்களிப்பு மகத்தானது,'' என, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருக்கு நேற்று காலை விமானத்தில் வந்த பிரதமர் மோடி, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில், பெங்களூரு - பெலகாவி; அமிர்தசரஸ் - ஸ்ரீமாதா வைஷ்ணோதேவி கத்ரி; அஜ்னி - புனே இடையிலான புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சர் சோமண்ணா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், காரில் ராகிகுட்டா மெட்ரோ ரயில் நிலையம் சென்ற பிரதமர் மோடி, ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையிலான டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார்.
க்யூ.ஆர்., கோடு மூலம் டிக்கெட் எடுத்து, மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி, உடன் பயணித்த மாணவ - மாணவியர், பொதுமக்களுடன் உரையாடினார். எலக்ட்ரானிக் சிட்டி மெட்ரோ நிலையத்தில் இறங்கிய அவர், ஐ.ஐ.டி., ஆடிட்டோரியம் சென்றார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில், 15,610 கோடி ரூபாய் செலவில், 44.65 கி.மீ., துார, பெங்களூரு நகரின் மூன்றாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இதில், பிரதமர் மோடி பேசியதாவது:
பெங்களூரில் காலடி எடுத்து வைத்தவுடன், கர்நாடகாவைச் சேர்ந்தவன் போல உணர்கிறேன். கன்னட மக்களின் அன்பு, மொழி, கலாசாரம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
புதிய இந்தியாவின் எழுச்சியின் அடையாளமாக பெங்களூரு மாறி வருகிறது. உலகளாவிய தகவல் தொழில்நுட்ப வரைபடத்தில், பெங்களூரு தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழித்த பெருமை ஆப்பரேஷன் சிந்துாரை சேரும். தொழில்நுட்ப சக்தி, மேக் இன் இந்தியாவின் அபார வளர்ச்சி, ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிக்கு காரணம். இதில், பெங்களூரு மற்றும் கர்நாடக இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு, மத்திய அரசு நிதி, தொழில்நுட்ப உதவிகளை செய்கிறது. மெட்ரோ திட்டங்களுக்காக மாநில அரசு இதுவரை, 59,139 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
மொத்த பங்களிப்பு 87.37 சதவீதம். மத்திய அரசு, 7,468 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளது. அவர்களின் பங்களிப்பு 12.63 சதவீதம்.
மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள், 50:50 பங்களிப்பு என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை, மாநில அரசும், மெட்ரோ நிறுவனமும் இணைந்து வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும்.
இதன் மூலம் எங்களுக்கு, 87.37 சதவீதம் சுமை உள்ளது. பெங்களூரின் வளர்ச்சியை கருதி, மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.