டில்லியில் பிரதமர் மோடியுடன் சுபான்ஷூ சுக்லா சந்திப்பு
டில்லியில் பிரதமர் மோடியுடன் சுபான்ஷூ சுக்லா சந்திப்பு
UPDATED : ஆக 18, 2025 08:18 PM
ADDED : ஆக 18, 2025 07:56 PM

புதுடில்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பி வைக்கும் இஸ்ரோவின், 'ககன்யான்' கனவு திட்டத்துக்காக தேர்வான நான்கு இந்திய வீரர்களில் ஒருவர் உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா.அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' நிறுவனத்தின், 'ஆக்சியம் - 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற நான்கு பேரில் இவரும் ஒருவர். இக்குழுவினர் ஜூலை 15ம் தேதி பூமிக்கு திரும்பினர். இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் தடம் பதித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுக்லா பெற்றார்.
மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் நேற்று, சுபான்ஷூ சுக்லா டில்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் வரவேற்றார். விமான நிலையத்தில் அவருக்கு பொது மக்கள் மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், சுபான்ஷூ சுக்லா டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, சுக்லாவை கை கொடுத்தும், கட்டியணைத்தும் பிரதமர் மோடி வரவேற்றார். இந்த சந்திப்பின் போது தனது விண்வெளி பயணம் குறித்த அனுபவத்தை மோடியிடம் சுக்லா பகிர்ந்து கொண்டார். மேலும், ஆக்ஸியம் 4 திட்டத்தின் அடையாளத்தை பிரதமரிடம் காட்டியதுடன், விண்வெளிமையத்தில் இருந்து பூமியை எடுத்த புகைப்படங்களையும் காட்டினார்.