திரிணமுல் காங்கிரசுக்கு பதிலடி கொடுங்கள்: எம்பிக்களுக்கு பிரதமர் உத்தரவு
திரிணமுல் காங்கிரசுக்கு பதிலடி கொடுங்கள்: எம்பிக்களுக்கு பிரதமர் உத்தரவு
ADDED : டிச 03, 2025 03:29 PM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், திரிணமுல் காங்கிரசுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க அம்மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இந்த முறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவது என பாஜ உறுதியாக உள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த பாஜ எம்பிக்களை பிரதமர் மோடி சந்தித்தார். அம்மாநிலத்தில் இருந்து பாஜவுக்கு 12 லோக்சபா எம்பிக்களும், 2 ராஜ்யசபா எம்பிக்களும் உள்ளனர்.
இந்த ஆலோசனையின் போது மேற்கு வங்கத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதித்த பிரதமர் மோடி தொடர்ந்து கூறியதாவது: எம்பிக்கள் மீதான தாக்குதல் குறித்த சம்பவங்களை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அப்போது தான் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியுள்ள வன்முறை சம்பவங்கள் மக்களுக்கு தெரிய வரும்.
தெளிவான தகவல் பரிமாற்றம் மற்றும் பொது மக்களை சந்திப்பது முக்கியம் என்பதை தற்போதைய சூழ்நிலைகள் காட்டுகின்றன. களத்தில் நடப்பதற்கு உடனுக்குடன் கட்சியினர் வலிமையாக பதிலளிக்க வேண்டும். 2026 ம் ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு தயாராவதுடன், கட்சியினரை ஒன்று திரட்டி வலுவான அடித்தளத்தை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

