நவீன வாழ்க்கைக்கு தியானம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
நவீன வாழ்க்கைக்கு தியானம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
ADDED : பிப் 05, 2024 01:56 AM

மும்பை: ''தற்போதைய நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் துன்பங்களை போக்குவதில், நம் பண்டைய பாரதம் அளித்த மிகப் பெரும் பரிசு தான், 'விபாசனா' தியான முறை,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
புத்தரால், 2,500 ஆண்டு களுக்கு முன் உருவாக்கப்பட்டது, விபாசனா தியான முறையாகும்.
தன்னை தானே அறிதல், தனக்குள்ளே ஒருங்கே சேருவதை உணர்த்தும் இந்த தியான முறையின் பிரபல ஆசிரியரான எஸ்.என்.கோயங்காவின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழா, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடந்தது.
இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
நம் பண்டைய பாரதம், நமக்கு பல பெரிய பொக்கிஷங்களை அளித்துள்ளது. அதில் முக்கியமானது யோகா. நம் கோரிக்கையை ஏற்று, யோகாவுக்காக சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதுபோல, தியானம் மற்றும் விபாசனாவும் நமக்கு கிடைத்த மிகப் பெரும் பரிசுகள்.
தியானம் மற்றும் விபாசனா என்பது மிகவும் கடினமான ஒன்று என்று பலரும் நினைக்கின்றனர். இது அறிவியல்பூர்வமானது.
நம் மனது, உடல், அறிவை ஒருங்கிணைக்கும் சிறந்த பயிற்சியாகும். மேலும், தற்போது பரவலாக பேசப்படும் தனிநபர் மேம்பாட்டுக்கான ஒரு சிறந்த பயிற்சி முறையாகும்.
தற்போதைய நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் துன்பங்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும், இதை மிகச் சுலபமாக செய்ய முடியும்.
புத்தரால் உருவாக்கப்பட்ட இந்த தியான முறைக்கு சரியான பாதையைக் காட்டியவர், விபாசனா குரு எஸ்.என்.கோயங்கா. நம் சமூகத்தில் மறக்கடிக்கப்பட்ட, நம் பாரம்பரியங்களில் இதுவும் ஒன்று.
அதை மீட்டெடுத்து, வாழ்க்கை முறையை எளிதாக்க அனைவரும் இதை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

