உக்ரைனை பற்றி யோசிக்கிறீங்க; மணிப்பூரை கொஞ்சம் பாருங்க: மோடிக்கு காங்., சரமாரி கேள்வி
உக்ரைனை பற்றி யோசிக்கிறீங்க; மணிப்பூரை கொஞ்சம் பாருங்க: மோடிக்கு காங்., சரமாரி கேள்வி
ADDED : செப் 27, 2024 06:57 AM

புதுடில்லி: 'பிரதமர் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கிறார், ஆனால் மணிப்பூரைப் பற்றி ஏன் யோசிக்கவில்லை' என காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய் கேள்வி எழுப்பினார்.
அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் நிலவும் இன மோதலைத் தீர்க்க பிரதமர் மோடியின் நேரடி அணுகுமுறை தேவை. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அமைதியின்மையை புறக்கணிக்கும் அதே வேளையில், உலகளாவிய ராஜதந்திரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்துகிறார்.
பிரதமர் மோடி நியூயார்க்கிற்குச் சென்று, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு தீர்வைத் தர முயற்சிப்பதை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம் . அவர் அமெரிக்க அதிபருடன், ரஷ்ய அதிபர் புடின் உடனும் பேசுகிறார். மணிப்பூரில் வசிக்கும் கூகி மற்றும் மெய்டி சமூக மக்களை சந்தித்து ஒன்று சேருமாறு கூறி பிரதமர் ஏன் அதே முயற்சியை எடுக்கவில்லை.
உலக நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்த ஹெலிகாப்டர் பயணம் செய்கிறார். அதே நேரத்தில் மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைக்கு தீர்வு காண பயணம் செய்யத் தவறினார்.அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய உள்துறை அமைச்சருக்கோ அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கோ வழங்க முடியாது. பிரதமர் மோடி தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினால், வடகிழக்கு மக்கள் அவருக்கு நன்றி கூறுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.
வடகிழக்கில் அமைதி, நமது தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியமானது. இந்திய அரசியலில் அதிகரித்து முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணத் தவறினால், இலங்கையில் நடந்ததைப் போன்ற அரசியல் விளைவுகளுக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

