5 ஆண்டுக்கான திட்டங்களை தயாரிக்க அமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
5 ஆண்டுக்கான திட்டங்களை தயாரிக்க அமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
ADDED : மார் 18, 2024 12:04 AM

புதுடில்லி: ''மத்தியில் அமையவுள்ள புதிய அரசின் முதல், 100 நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்களை தயார் செய்யும் பணியை துவங்குங்கள்,'' என, மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய மத்திய அமைச்சரவை, ஏழு கட்ட லோக்சபா தேர்தல் தேதிகளை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளை துவங்கியது.
அப்போது, மத்திய அமைச்சர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''வரும் ஜூன் மாதம் புதிய அரசு பொறுப்பேற்றதும் முதல், 100 நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து திட்டமிடுங்கள்.
''அதேபோல், 'விக் ஷித் பாரத்' திட்டத்தின்படி வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து அந்தந்த துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யுங்கள்,'' என வலியுறுத்தினார்.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விக் ஷித் பாரத் திட்டம் கடந்த இரண்டு ஆண்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
'வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க பல்வேறு மட்டங்களில் 2,700க்கும் மேற்பட்ட கூட்டங்கள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. நாடு முழுதும் 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன' என்றார்.

