ADDED : நவ 14, 2025 07:02 AM

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான, 'போக்சோ' வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பெங்களூரில், உதவி கேட்டு தன் இல்லத்துக்கு வந்த, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது, 'போக்சோ' வழக்கு பதிவானது. பின், இவ்வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி அருண் முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது நடந்த வாதம்:
மனுதாரர் வக்கீல் சி.வி.நாகேஷ்: சம்பவம், கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அதே தினம், சிறுமியும், அவரது தாயும் காவல் ஆணையரை பார்த்துள்ளனர். அப்போது, அவர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை.
ஒரு மாதம் கழித்து மார்ச் 14 அன்று முதல்முறையாக புகார் செய்துள்ளனர். விசாரணை நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை மட்டுமே ஆதாரங்களாக பரிசீலித்து உள்ளது.
அரசு வக்கீல் ரவிவர்மா குமார்: பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரும், எடியூரப்பாவும் பேசும் ஆடியோ பதிவு உள்ளது.
ஆடியோவில் உள்ள குரல் எடியூரப்பாவினுடையது என தடயவியல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர் குற்றம் செய்யவில்லை என்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் 2 லட்சம் ரூபாய் கொடுத்தார்?
நீதிபதி அருண்: விசாரணைக்கு தேவைப்பட்டால் மட்டும் நீதிமன்றத்தில் மனுதாரர் ஆஜராகலாம். அவரை தேவையின்றி விசாரணைக்கு ஆஜராக கட்டாயப்படுத்தக் கூடாது.
விசாரணை நீதிமன்றம், ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு வாதங்கள் நடந்தன. மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், எடியூரப்பாவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

