ADDED : ஜூலை 14, 2025 03:25 PM
தானே: மஹாராஷ்டிராவில் சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மாவட்ட நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தின் பாயண்டர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 2ல் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பாததால், அச்சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் வசித்த ஜார்க்கண்டைச் சேர்ந்த 25 வயது நபர் அச்சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தேஷ்முக் விசாரித்து வந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தேஷ்முக் நேற்று பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில், நீதிமன்ற விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட சிறுமி, விருப்பப்பட்டே அந்நபருடன் சென்றதாக கூறியுள்ளார்.
தற்போது, இருவரும் கணவன், மனைவியாக மகிழ்ச்சியுடன் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், இதுவரை அந்நபர் மீது அப்பெண் புகார் ஏதும் அளிக்கவில்லை.
எனவே, அவர் மீதான போக்சோ வழக்கை இந்நீதிமன்றம் ரத்து செய்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.