குடிநீர் தொட்டியில் விஷம்? கிராமத்தினர் குற்றச்சாட்டு!
குடிநீர் தொட்டியில் விஷம்? கிராமத்தினர் குற்றச்சாட்டு!
ADDED : அக் 06, 2024 08:37 PM
ராய்ச்சூர்:
குடிநீர் தொட்டியில் விஷம் கலந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிராமத்தினரின் சாதுர்யத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அசுத்தமான குடிநீர் பயன்படுத்தி, மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. சமீபத்தில் உடுப்பியில் தொட்டியில் இருந்து வினியோகிக்கப்பட்ட நீரை பயன்படுத்தி, இரண்டு கிராமங்களின் 1,000 பேருக்கு மேற்பட்டோர், வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ராய்ச்சூர், லிங்கசகூரின் தவகா கிராமத்தில் வாட்டர் மேன் ஆதப்பா என்பவர், தொட்டியில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகித்தார். இந்த நீரில் துர்நாற்றம் வீசியது. நுரை வந்தது. இதனால் சந்தேகமடைந்த கிராமத்தினர், அந்த நீரை பயன்படுத்தவில்லை.
கிராமத்தினர் சேர்ந்து குடிநீர் வினியோகிக்கப்பட்ட தொட்டியை ஆய்வு செய்தனர். நீரில் விஷமிகள் பூச்சி கொல்லி மருந்து கலந்திருக்கலாம் என, சந்தேகம் ஏற்பட்டது. வாட்டர் மேனிடம் கூறி, உடனடியாக தண்ணீரை முழுமையாக காலி செய்ய வைத்தனர். அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த அதிகாரிகள், கிராமத்தினரின் குடிநீருக்கு மாற்று வசதி செய்தனர். குடிநீர் மாதிரியை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பினர். தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்துள்ளதாக, கிராமத்தினர் சந்தேகம் தெரிவித்ததால், ஹட்டி போலீஸ் நிலையத்தில், ஆதப்பா புகார் அளித்தார். போலீசாரும் விசாரிக்கின்றனர்.