ADDED : ஜன 23, 2025 01:25 AM
பெங்களூரு : மழை, வெயில், குளிர் என, வானிலையில் அடிக்கடி நிகழும் மாற்றங்களால், பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல நகரங்களிலும் விஷக்காய்ச்சல் பரவுகிறது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெங்களூரு உட்பட கர்நாடகா முழுதும் வெயில், மழை, குளிர் என, வானிலையில் அடிக்கடி மாற்றம் நிலவுகிறது. தினந்தோறும் வானிலை மாறுவதால், மக்களின் உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது. விஷக்காய்ச்சலால் ஏராளமானோர் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, சிறார்கள், மூத்த குடிமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
இதை தீவிரமாக கருதிய சுகாதாரத் துறை, இது குறித்து மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகளை இருப்பு வைத்துள்ளது.
பெங்களூரில் உள்ள கே.சி.ஜெனரல் மருத்துவமனை டாக்டர் சுரேஷ் கூறுகையில், ''வானிலை மாற்றத்தால் சிறார்களுக்கு நிமோனியா, மூச்சுத்திணறல், விஷக்காய்ச்சல் அதிகரித்துள்ளது. இருமல், காய்ச்சல் பிரச்னை அதிகரிக்கிறது.
''சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பது, சாலை ஓரங்களில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதாலும், நோய்கள் பரவுகின்றன. இதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

