ADDED : ஜன 21, 2025 07:14 AM

தார்வாட்: ''ஏ.டி.எம்., வங்கியில் பணத்தை நிரப்ப கொண்டு செல்லும் போது, ஆர்.பி.ஐ.,யின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு, வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என ஹூப்பள்ளி - தார்வாட் நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்தார்.
கர்நாடகாவின் பீதர், தட்சிண கன்னடாவில் நடந்த இரு கொள்ளை சம்பவத்தை ஒட்டி, மாவட்டத்தில் உள்ள வங்கி பிரதிநிதிகள், நிதி நிறுவன பிரதிநிதிகளுடன், நேற்று நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவம் போன்று, தார்வாடில் இத்தகைய சம்பவம் நடக்காத வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் பிரதிநிதிகளுடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பணத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
ஏ.டி.எம்., வங்கியில் பணத்தை நிரப்ப கொண்டு செல்லும் போது, ஆர்.பி.ஐ.,யின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு, வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. நகரில் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்படும்.
பணத்தை கொண்டு செல்பவர்களுக்கு ஏதாவது சந்தேகத்திற்கடமான நடமாட்டமோ அல்லது யாராவது பின்தொடர்வதாக இருந்தால், உடனடியாக அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

