தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக லாலு மகன் மீது போலீசார் வழக்கு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக லாலு மகன் மீது போலீசார் வழக்கு
ADDED : அக் 21, 2025 07:21 AM

ஹாஜிப்பூர்: பீஹாரில் லாலு பிரசாத்தின் மூத்த மகனும், ஜனசக்தி ஜனதா தள தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ், போலீஸ் லோகோ மற்றும் சைரனை பயன்படுத்திய விவகாரத்தில், அவர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
பீஹாரில் அடுத்த மாதம், 6 மற்றும் 11ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது.
வேட்புமனு முன்னதாக பீஹாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹூவா சட்டசபை தொகுதியில் போட்டியிட, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், ஜனசக்தி ஜனதா தள தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் கடந்த 16ம் தேதி தன் ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார்.
அப்போது அவர், பீஹார் மாநில போலீஸ் லோகோ மற்றும் சைரன் உள்ளிட்டவற்றை தன் சொகுசு காரில் பயன்படுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
புகார் இதையடுத்து, மஹூவா வட்ட தேர்தல் அதிகாரி போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி, போலீ சார் நடத்திய விசாரணையில், தேஜ் பிரதாப் யாதவ் தன் வேட்புமனுவை தாக்கல் செய்தபோது பயன்படுத்தப்பட்ட போலீஸ் லோகோ மற்றும் சைரன் உள்ளிட்டவை தனிப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.
இது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.