போலீசின் அதிகார வரம்பு அக்கப்போர்; 4 மணி நேரம் சாலையில் கிடந்த உடல்
போலீசின் அதிகார வரம்பு அக்கப்போர்; 4 மணி நேரம் சாலையில் கிடந்த உடல்
ADDED : ஜன 07, 2025 03:13 AM

புதுடில்லி: உத்தர பிரதேசம், மத்திய பிரதேச போலீசார் இடையே எழுந்த எல்லை அதிகார வரம்பு தொடர்பான பிரச்னை காரணமாக, விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல், நான்கு மணி நேரம் சாலையோரம் கிடந்த அவலம் அரங்கேறி உள்ளது.
டில்லியை ஒட்டியே உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்கள் அமைந்துள்ளன. இம்மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலைக்காக டில்லி சென்று வருவது வாடிக்கை.
அந்த வகையில், ம.பி.,யை சேர்ந்த ராகுல் அஹிர்வர், 27, கூலி வேலை தேடி நேற்று முன்தினம் மாலை டில்லிக்கு புறப்பட்டார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.
வீட்டில் இருந்து புறப்பட்டவர், சாலையை கடக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் ம.பி.,யின் ஹர்பல்புர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்து நடந்த இடம், உ.பி.,யின் மஹோப்காந்த் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி என கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
கிராம மக்கள், உ.பி., போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களோ, இது ம.பி., போலீசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதி எனக்கூறி நழுவிக் கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விவகாரம் பெரிதானதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த ம.பி., போலீசார், ராகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வரும் வரை, ராகுலின் உடல் நான்கு மணி நேரமாக சாலையோரம் கிடந்தது. உடலின் அருகே அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

