பெண் கடத்தப்படுவதாக செய்தி போலீஸ் நடவடிக்கையில் 'புஸ்'
பெண் கடத்தப்படுவதாக செய்தி போலீஸ் நடவடிக்கையில் 'புஸ்'
ADDED : ஜூன் 24, 2025 07:43 PM
புதுடில்லி:பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து, போலீசார் சுறுசுறுப்படைந்து அந்த பெண்ணை தேடினர். அப்போது அந்த பெண், தானாகவே காரில் சென்றதாகவும், யாரும் கடத்தவில்லை என்றும் கூறியதை அடுத்து, இந்த விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்தது.
டில்லியின் வட கிழக்கு பகுதியில் உள்ள பஜன்புரா போலீஸ் நிலையத்திற்கு, நேற்று அதிகாலை, 2:50 மணிக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மவுஜ்பூர் என்ற இடத்தில் ஒரு பெண்ணை நான்கு பேர் கும்பல், காரில் இழுத்து போட்டு சென்றனர் என கூறி, அந்த பெண்ணை கடத்திய கார் எண்ணையும் கூறினார்.
இதையடுத்து, போலீஸ் தனிப்படையினர் அமைக்கப்பட்டு, அந்த காரை தேடினர். அப்போது, அந்த பெண் மட்டும் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது, யாரும் தன்னை கடத்தவில்லை. காரில் தன் சொந்த ஊருக்கு வந்ததாக கூறினார்.
இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:
அந்த பெண்ணை நான்கு பேர் கும்பல் காரில் இழுத்து போட்டு வேகமாக சென்றனர் என்ற தகவல் அறிந்ததும், போலீஸ் தனிப்படையினர் அமைக்கப்பட்டனர். இந்த விவகாரம் முக்கியமானது என்பதால், எல்லையோர காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டனர்; வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.
அப்போது, கார் ஒன்றிலிருந்து இறங்கிய அந்த பெண், 'என்னை யாரும் கடத்தவில்லை. ஆண் நண்பருடன் தங்கியிருந்த நான், அவருடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, தனியாக என் கிராமத்திற்கு வந்தேன்' என கூறினார்.
அதையடுத்து, நிம்மதி பெருமூச்சு விட்ட போலீசார், அந்த பெண்ணை தேடும் பணியை நிறுத்தினர்.
இவ்வாறு அந்த தனிப்படை போலீசார் கூறினர்.