ADDED : ஏப் 05, 2025 06:42 AM

திருவனந்தபுரம்: வீடு வீடாக சென்று பழைய துணி மற்றும் பொருட்களை வாங்கி ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு வழங்கி வந்தவரின் பணப்பையை பறித்து சென்ற போலீஸ் எஸ்.ஐ., பிரதீப் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய் 28. வீடு வீடாகச் சென்று பழைய துணி மற்றும் பொருட்களை வாங்கி ஆதரவற்றோர் காப்பகத்துக்கு வழங்கி வருகிறார். மார்ச் 31 ல் இவர் விழிஞ்ஞம் பகுதியில் டூவீலரில் அமர்ந்து இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த திருவனந்தபுரம் பட்டம் போக்குவரத்து உதவி ஆணையர் அலுவலக எஸ்.ஐ., பிரதீப் விஜயிடம் விசாரணை நடத்தினார்.
அவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பழைய துணி மற்றும் பொருட்களை வாங்க வந்திருப்பதாக கூறினார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது திடீரென விஜயிடம் இருந்த பணப்பையை வாங்கி கொண்டு எஸ்.ஐ., பைக்கில் சென்றார். இதுகுறித்து விஜய் விழிஞ்ஞம் போலீசில் செய்த புகாரில் ரூ.5 ஆயிரம் வைத்திருந்த பணப்பையை எஸ்.ஐ., பிரதீப் எடுத்து சென்றதாக குறிப்பிட்டார்.
இதுகுறித்து விசாரணை நடந்த நிலையில் எஸ்.ஐ., மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ் உத்தரவிட்டார். எஸ்.ஐ., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.