சைபர் வழக்குகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு விரைவில் பயிற்சி
சைபர் வழக்குகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு விரைவில் பயிற்சி
ADDED : ஜன 27, 2024 12:23 AM
பெங்களூரு, -“சைபர் குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க, போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும்,” என, மாநில டி.ஜி.பி., அலோக் மோகன் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளாக, மாநிலத்தில் சைபர் மோசடிகள் அதிகரிக்கின்றன. சைபர் குற்றங்களை கண்டுபிடிக்க, அனைத்து போலீசாருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
சைபர் மோசடி தொடர்பாக, பெங்களூரின் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும், ஆண்டுதோறும் 4,000 முதல் 5,000 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகின்றன.
போலீஸ் நிலைய ஊழியர்கள், இந்த வழக்குகளை கண்டுபிடிப்பது கஷ்டம். எனவே இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, சைபர் குற்றங்களுக்கு கடிவாளம் போடப்படும்.
பெங்களூரில் 20,000 போலீசார் பணியாற்றுகின்றனர். போலீஸ் ரோந்து மேலும் பலப்படுத்தப்படும். பெங்களூரில் பதிவாகும் குற்ற வழக்குகளில், 25 சதவீதம் வழக்குகள் சைபர் குற்றங்களாகும்.
இவற்றை கட்டுப்படுத்துவதில் போலீஸ் துறை கவனம் செலுத்தும்.
கடந்தாண்டு போதைப்பொருள் தொடர்பாக, பல ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகின. 125 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 150 வெளிநாட்டு பிரஜைகள் உட்பட, 7,000த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

