வரதட்சனையாக விலை குறைந்த கார் திருமணத்தை நிறுத்திய போலீஸ்காரர்
வரதட்சனையாக விலை குறைந்த கார் திருமணத்தை நிறுத்திய போலீஸ்காரர்
UPDATED : நவ 23, 2026 06:14 PM
ADDED : நவ 23, 2026 06:14 PM
புதுடில்லி: வரதட்சனையாக தான் கேட்ட, 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காருக்கு பதிலாக, ஒன்பது லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கிக் கொடுத்ததால், திருமணத்தை நிறுத்திய போலீஸ்காரர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
டில்லி மாநகர போலீசில் கான்ஸ்டபிளாக இருப்பவர் குல்தீப். இவருக்கும், ஹரியானா மாநிலம், சோனிபட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சோனிபட் மாம்சந்த் வாடிகாவில் கடந்த, 20ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.
மணமகளின் தந்தை சுபாஷ் குமார், தன் மருமகனுக்காக 9.5 லட்சம் ரூபாய் விலையில் ‘ஹூண்டாய் ஆரா’ என்ற காரை ஆர்டர் செய்திருந்தார். ஆனால், தான் கேட்ட, 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ‘மாருதி பிரெஸ்ஸா’ கார் தான் வேண்டும் என, குல்தீப் அடம் பிடித்தார்.
ஹரியானாவில் உள்ள விற்பனையகங்களில் அந்தக் கார் கிடைக்கவில்லை என்பதால், ஹூண்டாய் ஆரா கார் ஆர்டர் செய்ததாக சுபாஷ் குமார் சமாதானம் கூறினார். அதை குல்தீப் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணத்தை நிறுத்தினார்.
இதனால் கடும் வேதனை அடைந்த சுபாஷ் குமார், இதுகுறித்து சோனிபட் போலீசில் புகார் செய்தார்.
புகாரில் சுபாஷ் குமார் கூறியிருப்பதாவது:
என் மகள் திருமணத்துக்காக சோபா செட், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், குல்தீபுக்கு இரண்டு தங்கச் சங்கிலிகள், குல்தீப் தாய்க்கு இரண்டு ஜோடி கம்மல்கள் வழங்கினேன். குல்தீபின் சகோதர் மற்றும் அவரது மனைவிக்கும் தங்க நகைகள் கேட்டனர். மேலும், குல்தீப் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விலை உயர்ந்த ஆடைகள் வாங்கிக் கொடுத்தேன். ஏராளமான பரிசுப் பொருட்களும் வழங்கினேன்.
குல்தீப் குடும்பத்தினர் வற்புறுத்தியதால், அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி, டி.ஜே., நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால், திருமண நாளன்று குல்தீப் மற்றும் அவரது தாய் மட்டும் சாதாரண உடையில் வந்தனர். தான் கேட்ட மாருதி பிரெஸ்ஸா கார் உடனடியாக வாங்கித் தர வேண்டும் என, குல்தீப் கேட்டார். ஹரியானாவில் தற்போது அந்தக் கார் இல்லை என்பதால், ஹூண்டாய் ஆரா கார் ஆர்டர் செய்திருப்பதாக கூறினேன். மேலும், ஆர்டர் செய்த ஹூண்டாய் காரை ரத்து செய்து விட்டு, மாருதி பிரெஸ்ஸா கார் விற்பனைக்கு வந்தவுடன் வாங்கித் தருவதாக கூறினேன். ஆனால், எந்த பதிலும் கூறாமல், குல்தீபும் அவரது தாயும் மண்டபத்தில் இருந்து சென்று விட்டனர். இதனால், நானும் என் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, சோனிபட் போலீஸ் துணை கமிஷனர் ஜிதேந்தர் கெலாட் கூறியதாவது:
மணகமகளின் தந்தை சுபாஷ் குமார் கொடுத்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதற்கிடையில், ஊர் முக்கியப் பிரமுகர்கள் இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தி வருகின்றனர். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சுபாஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து டில்லி மாநகர போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹரியானாவில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய டில்லி மாநகர போலீஸ் கமிஷனர், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, கான்ஸ்டபிள் குல்தீபை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார்.
