'ரீல்ஸ்' வெளியிட்ட மனைவியால் போலீஸ் கணவர் சஸ்பெண்ட்
'ரீல்ஸ்' வெளியிட்ட மனைவியால் போலீஸ் கணவர் சஸ்பெண்ட்
ADDED : ஏப் 02, 2025 10:52 PM
சண்டிகர்:சண்டிகரில் சமீபத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பிரதான சாலையின் நடுவே நடனமாடி, 'ரீல்ஸ்' எடுத்த பெண், அதை போலீஸ் கணவரின் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் பதிவேற்றியதால் அவர் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.
சண்டிகர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரின் கணவர் அஜய் குந்து சண்டிகர் போலீசில் கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார். கடந்த மாதம் தன் மைத்துனி பூஜாவுடன் செக்டார் 20ல் உள்ள குருத்வாரா சவுக்கிற்கு சென்ற ஜோதி, பிரதான சாலையின் சந்திப்பில், பச்சை நிற சிக்னல் போடப்பட்டிருந்த போது, ரீல்ஸ் வீடியோவுக்காக பிரபல பாடல் ஒன்றுக்கு வாயசைத்து நடனமாடினார்.
இந்த வீடியோவை, தன் கணவர் அஜய் குந்துவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். இது அதிகம் பேரால் பகிரப்பட்டது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக 'ரீல்ஸ்' வீடியோ எடுத்ததற்காக பலர் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு செக்டார் 17ல் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவரும் அஜய் குந்து உடையது என்பது தெரிந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவரின் மனைவி மற்றும் மைத்துனி ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின் எச்சரித்து ஜாமினில் விடுவித்தனர். மனைவியின் ரீல்ஸ் மோகத்தால் போலீஸ் கணவர் சஸ்பெண்ட் ஆனதற்கு பலர் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்தனர்.

