போலியோ இல்லாத நாடு: 15 வது ஆண்டு மைல்கல்லை எட்டி இந்தியா சாதனை
போலியோ இல்லாத நாடு: 15 வது ஆண்டு மைல்கல்லை எட்டி இந்தியா சாதனை
ADDED : ஜன 13, 2026 06:23 PM

புதுடில்லி: போலியோ இல்லாத நாடாக மாறி 15 வது ஆண்டுகளை நிறைவடைவதை நாடு இன்று(ஜனவரி 13) கொண்டாடுகிறது. உலகளாவிய பொதுச் சுகாதார வரலாற்றில் இது ஒரு மிகச்சிறந்த மைல்கல்லாகும்.
இந்தியாவின் கடைசி வைல்ட் போலியோ வைரஸ் பாதிப்பு 2011, ஜனவரி 13 அன்று மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் ஒரு சிறுமிக்கு கண்டறியப்பட்டது.அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய பாதிப்புகள் ஏதும் இல்லாததால், உலக சுகாதார அமைப்பு கடந்த 2014 மார்ச் 27 அன்று இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஒரு காலத்தில் உலகில் பதிவாகும் போலியோ பாதிப்புகளில் 60 சதவீதம் இந்தியாவில் இருந்தன. அந்த நிலையிலிருந்து 'பூஜ்ஜியம்' நிலையை அடைந்தது மருத்துவ உலகின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
வெற்றிக்கான காரணங்கள்:
1995-இல் தொடங்கப்பட்ட பல்ஸ் போலியோ திட்டம் மூலம், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17.2 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இதில் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
அதிக பாதிப்பு இருந்த உத்தரபிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்களில் புதிய உத்தியாக பயன்படுத்தப்பட்ட வாய்வழி தடுப்பூசிகள் மூலம் தீவிரப்பணி மேற்கொள்ளப்பட்டது.வலுவான அரசியல் உறுதிப்பாடு, ரோட்டரி இன்டர்நேஷனல், யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்பு ஆகியவை இந்த வெற்றிக்குக் காரணமாயின.நோய் எதிர்ப்பு சக்தியைத் தக்கவைக்க தேசிய மற்றும் மாநில அளவிலான தடுப்பூசி முகாம்கள் இப்போதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டில், போலியோ கண்காணிப்புப் பணிகள் இந்தியாவின் 'ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்துடன்' இணைக்கப்பட்டு, பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

