வடகிழக்கு மாநில அரசியல் தலைவர்கள் கொந்தளிப்பு! வங்கதேசத்தை துண்டாடுவோம் என ஆவேசம்
வடகிழக்கு மாநில அரசியல் தலைவர்கள் கொந்தளிப்பு! வங்கதேசத்தை துண்டாடுவோம் என ஆவேசம்
ADDED : ஏப் 02, 2025 06:26 AM

புதுடில்லி: வடகிழக்கு மாநிலங்கள் தொடர்பாக, அண்டை நாடான வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறிய கருத்துக்கு, வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ''தேவைப்பட்டால் வங்கதேசத்தை உடைப்போம்,'' என, திப்ரா மோத்தா கட்சித் தலைவர் பிரத்யுத் தேப் பர்மன் கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தையடுத்து, ஆட்சி கவிழ்ந்தது. ராணுவத்தின் உதவியுடன், இடைக்கால நிர்வாகம் நடந்து வருகிறது. இதன் தலைமை ஆலோசகராக, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் உள்ளார்.
சீனாவின் கடனுதவியால் பல திட்டங்கள் அந்த நாட்டில் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வங்கதேசம் சென்று விட்டது. இந்நிலையில், சமீபத்தில் சீனா சென்ற யூனுஸ், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
அப்போது, 'இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், வங்கதேசத்தின் எல்லையால் சூழப்பட்டுள்ளன. வங்கக் கடலை அந்த மாநிலங்கள் அணுக முடியாது. 'அதனால், வங்கக் கடலின் பாதுகாவலனாக உள்ளதால், வங்கதேசத்தில் சீனா அதிகளவு முதலீடு செய்ய வேண்டும்' என, யூனுஸ் கூறினார்.
இந்தியா - சீனா இடையேயான உறவு புதுப்பிக்கும் முயற்சி நடப்பதால், இதில் மத்திய அரசு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும், வங்கதேசத்தின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடும் கண்டனம்
குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகள், முதல்வர்கள், முகமது யூனுஸ் கருத்துக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். திரிபுராவைச் சேர்ந்த, திப்ரா மோத்தா என்ற கட்சியின் தலைவரும், திரிபுராவை ஆண்ட மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான, பிரத்யுத் தேப் பர்மன் கூறியதாவது:
வங்கதேசத்தின் தலைமை ஆலோசகரின் பேச்சு, வடகிழக்கு மாநிலங்கள் கடலை அணுகுவதற்கான மாற்று பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான புதுமையான திட்டத்துக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவழிப்பது, சவாலான பொறியியல் திட்டத்தை உருவாக்குவது தேவையில்லை.
இதற்கு மாற்றாக, வங்கதேசத்தை உடைத்து, நமக்கான பாதையை உருவாக்குவோம். வங்கதேசத்தின சிட்டகாங்க் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோதே, நம் நாட்டுடன் இணைவதற்கு தயாராக இருந்தனர்.
அதுபோல, அங்குள்ள திரிபுரி, காரோ, காஷி, சக்மா மக்களும், தங்களுடைய பாரம்பரிய பகுதிகளில், மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அவர்களும் இந்தியாவுடன் இணைவதற்கு தயாராக உள்ளனர்.
அதனால், நம் நாட்டின் தேசிய நலனைக் கருதியும், அந்த மக்களின் நலனைக் கருதியும், அவர்கள் வசிக்கும் சிட்டகாங்க் உள்ளிட்ட பகுதிகளை, வங்கதேசத்திடம் இருந்து உடைத்தால், கடலுக்கான அணுகல் நமக்கு கிடைத்துவிடும்.
மறந்து விடக் கூடாது
நாடு சுதந்திரம் பெற்றபோதே, இந்தப் பகுதிகளை நம்முடன் சேர்த்திருக்க வேண்டும். அப்போது தவறு செய்துவிட்டோம். வங்கக் கடலின் பாதுகாவலர் என்று யூனுஸ் கூறிக் கொள்கிறார். ஆனால், 85 வயதான அவரே, அந்த நாட்டின் ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இந்தப் பதவியில் உள்ளார். அவர் கூறும் துறைமுகத்துக்கு சில கி.மீ., துாரத்தில் தான், திரிபுரா உள்ளது என்பதை அவர் மறந்து விடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் முன்னாள் முதல்வரான பா.ஜ.,வின் பைரேன் சிங்கும், வங்கதேசத்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். ''இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுக்கும் வகையில், யூனுஸ் பேச்சு அமைந்துள்ளது. இதற்கான பின்விளைவுகளை அவர் நிச்சயம் சந்திப்பார்,'' என, அவர் கூறியுள்ளார்.