ADDED : பிப் 20, 2024 11:32 PM
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, கர்நாடகாவில், லோக்சபா தேர்தல் யுத்த களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் பா.ஜ., - ம.ஜ.த., தேர்தலுக்கு தொண்டர்கள் படையுடன் தயாராகின்றன. காங்கிரஸ், பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள் விரைவில், கர்நாடகாவுக்கு படையெடுத்து வரத் தயாராகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ், அதே உற்சாகத்துடன் லோக்சபா தேர்தலுக்கு தயாராகிறது. குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற, இலக்கு நிர்ணயித்து செயல்படுகிறது. அமைச்சர்கள், தலைவர்கள் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு, கட்சியை தேர்தலுக்குத் தயாராக்குகின்றனர்.
தேர்தலுக்கு மும்முரம்
எதிர்க்கட்சியான பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள் தேர்தலுக்கு மும்முரமாக தயாராகின்றனர். சீட்டுக்கு துண்டு போடுவதும் ஜோராகவே நடக்கிறது. சீட் எதிர்பார்க்கும் தலைவர்கள், டில்லிக்கு சென்று மேலிட தலைவர்களை சந்தித்து வாய்ப்பு கேட்கின்றனர். சிலர் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தொகுதியில் பிரசாரத்தைத் துவக்கியுள்ளனர்.
தேசிய கட்சிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை போன்று, ம.ஜ.த.,வும் களத்தில் குதித்துள்ளது. தேசிய தலைவர் தேவகவுடா, மாநிலத் தலைவர் குமாரசாமி, தலைவர்கள், தொண்டர்களுடன் கூட்டம் நடத்துகின்றனர்.
தேர்தலுக்கு திட்டம் வகுக்கின்றனர். பெங்களூரின், ஜே.பி., நகர் இல்லம், சேஷாத்திரி புரம் ம.ஜ.த., அலுவலகம், பிடதி பண்ணை வீடு பரபரப்பாக உள்ளது. எப்போதும் தொண்டர்கள், தலைவர்கள் நிரம்பியுள்ளனர்.
கட்சி தாவ தயார்
இதற்கிடையில் தேர்தல் வாகனத்தில் பயணம் செய்ய, காங்கிரஸ், பா.ஜ.,வில் சீட் பிடிக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள், பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிடைக்காது என, உணர்ந்தவர்கள் கட்சி தாவலுக்கு தயாராகின்றனர். சுயேச்சையாக போட்டியிடலாமா என, ஆலோசிக்கின்றனர். மக்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில் உள்ளனர்.
இதுவரை யாராவது உதவி கேட்டு சென்றால், மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொண்டதில்லை. வீட்டில் இருந்தாலும் பொதுமக்களை சந்திப்பது இல்லை. ஆனால் இப்போது சூழ்நிலை தலைகீழாக மாறியுள்ளது. தற்போதைய எம்.பி.,க்கள், சீட் எதிர்பார்ப்போர், தொகுதியில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் தவறாமல் ஆஜராகின்றனர். திருவிழாக்களுக்கு தாராளமாக நன்கொடை வழங்குகின்றனர்.
ஆளுங்கட்சியான காங்கிரஸ் வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தியதால், கட்சியின் செல்வாக்கு அதிகரித்தது. மக்களின் பார்வை இக்கட்சி மீது திரும்பியது. ஆனால், அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பின், எதிர்க்கட்சி பா.ஜ.,வின் இமேஜ் ஏறுமுகமாகிறது. ராமர் கோவில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட, கட்சியின் செல்வாக்கை மீண்டும் கொண்டு வர, காங்கிரஸ் முயற்சிக்கிறது.
வாக்குறுதி திட்டங்கள்
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட அனைத்து அமைச்சர்கள், தலைவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், வாக்குறுதித் திட்டங்கள் குறித்து விவரிக்க மறப்பதில்லை. தங்கள் கட்சியின் திட்டங்களை, மத்திய அரசு திருடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், வாக்குறுதித் திட்டங்களை அஸ்திரமாக பயன்படுத்துகின்றனர்.
மற்றொரு பக்கம், லோக்சபா கூட்டத்தில் பங்கேற்று, பெங்களூரு திரும்பிய பா.ஜ., - எம்.பி.,க்கள், தலைவர்கள், லோக்சபா தேர்தல் திட்டங்கள் வகுப்பதில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் 10 ஆண்டுகள் ஊழலற்ற ஆட்சி, செயல்படுத்திய திட்டங்கள், அயோத்தியில் பல போராட்டங்களுக்கு பின், ராமர் கோவில் கட்டியது உட்பட, மத்திய அரசின் சாதனைகளை அஸ்திரமாக பயன்படுத்துகின்றனர்.
விரைவில் தலைவர்களுக்கு, பொறுப்பு பகிர்ந்தளிக்கப்படும். மத்திய அரசு திட்டங்களின் மாநாடு நடத்த தயாராகின்றனர். அது மட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அயோத்தி ராமர் கோவிலுக்கு பெண்களை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். மாநில சுற்றுப்பயணத்துக்கும், தலைவர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.
வரும் நாட்களில் காங்கிரஸ், பா.ஜ., டில்லி தலைவர்கள், கர்நாடகாவுக்கு படையெடுப்பர். பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ராகுல், சோனியா உட்பட இரு கட்சிகளின் தலைவர்கள் வருவர். அந்தந்த கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் முதல்வர்கள், முக்கிய தலைவர்களும் வருவர்.
20 தொகுதிகள்
கர்நாடகாவில் 20 லோக்சபா தொகுதிகளை கைப்பற்ற, இரண்டு கட்சிகளும் உறுதி பூண்டுள்ளன. எனவே, வரும் நாட்களில் ஊர்வலம், பொதுக் கூட்டம், மாநாடு என, கர்நாடகாவில் தேர்தல் திருவிழா களைகட்டும்.
- நமது நிருபர் -

