மாசு இல்லாத டில்லி: திட்டம் தயார் என்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மாசு இல்லாத டில்லி: திட்டம் தயார் என்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
ADDED : ஜன 02, 2025 04:18 PM

புதுடில்லி:அடுத்த 5 ஆண்டுகளில் டில்லியை மாசு இல்லாததாக மாற்றுவோம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
தேசிய தலைநகரை காற்று மாசுபாட்டிலிருந்து விடுவிக்க, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று தனது திட்டத்தை தெரிவித்தார்.
டில்லியில் நிதின் கட்கரி அளித்த பேட்டியில் கூறியதாவது:
அடுத்த 5 ஆண்டுகளில் டில்லியை காற்று மாசுபாட்டிலிருந்து விடுவிக்கும் பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன.
தேசிய தலைநகர் டில்லியில் 40 சதவீதம் காற்று மாசுபாடு பொருட்களை எரிப்பதால் ஏற்படுகிறது. இப்பிரச்னையிலிருந்த விடுபட, இது தொடர்பாக, மத்திய அரசு, நகரத்தில் மின்சார பஸ்களை அறிமுகப்படுத்தியது. அதுவே நாட்டில் மின்சார கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த வாகன உற்பத்தியாளர்களுக்கு உதவியது.
சி.என்.ஜி, எல்.பி.ஜி மற்றும் ப்ளெக்ஸ் எரிபொருள்கள் (இ20) போன்ற மாற்று எரிபொருள் வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் இணைந்து நகரின் மாசு அளவைக் குறைக்கும்.
இந்த முயற்சிகள் அனைத்தும் டில்லியை காற்று மாசுபாட்டிலிருந்து விடுவிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு உதவும்.
இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

