ஆரம்பிச்ச உடனே முடிஞ்சுது... அப்புறம் வெயிட்டிங் லிஸ்ட்! இது பொங்கல் ஸ்பெஷல்
ஆரம்பிச்ச உடனே முடிஞ்சுது... அப்புறம் வெயிட்டிங் லிஸ்ட்! இது பொங்கல் ஸ்பெஷல்
ADDED : செப் 13, 2024 11:54 AM

சென்னை: ஜனவரி 11ம் தேதி சொந்த ஊர் செல்வதற்கான பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது.
பயணிகள் எண்ணிக்கை
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் திருநாட்களில் சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்கூட்டியே தொலைதூர பயணத்தை திட்டமிடுவோர் அதற்காக ரயில்களில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துவிடுவர். குறிப்பாக தென் மாவட்ட ரயில்களுக்கு எப்போதுமே டிமாண்ட் அதிகம்.
முன்பதிவு
அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி போகி, மறுநாள் 14ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி மாட்டுப்பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் ஜனவரி 10ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கி சில நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
சில நிமிடங்களில் ஓவர்
இந் நிலையில் ஜனவரி 11ம் தேதி சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு அறிவித்தப்படி இன்று காலை தொடங்கியது. 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு அடுத்த சில நிமிடங்களில் முடிந்தது. குறிப்பாக மதுரை, நெல்லை, கன்னியாகுமரி என தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் டிக்கெட் முன்பதிவு சடுதியில் விற்றுத் தீர்ந்தது.
ஆன்லைன்
கொல்லம், பாண்டியன், அனந்தபுரி, பல்லவன், கன்னியாகுமரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலே விற்றது. ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டதால், டிக்கெட் கவுண்ட்டர்களில் அதிகாலை 5 மணி முதல் காத்திருந்த பலருக்கும் வெயிட்டிங் லிஸ்ட் பிரிவில் தான் டிக்கெட் கிடைத்துள்ளது.
சிறப்பு ரயில்கள்
தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் பெறுவது எப்போதும் டிமாண்ட் என்பதால் இம்முறையும் சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது. ஆனால் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. அங்கு செல்லும் பெரும்பாலான ரயில்களில் தற்போதைய வரை, டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையாகாமல் உள்ளன.
மற்ற நாட்கள்
ஜனவரி 10, 11 தேதிகளுக்கான முன்பதிவு முற்றுபெற்ற நிலையில் 12ம் தேதிக்கு பயணம் செல்வோர் நாளையும், போகி அன்று பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் வரும் 15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.