ADDED : ஆக 09, 2011 02:15 AM

கிராமப்புற மின்மயத் திட்டத்தில் அதிக அக்கறை காட்டி, அதில் ஆய்வு செய்து சாதனை படைத்தவர், ஹரீஷ் ஹண்டே. இவருக்கு, ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும், ராமன் மகசசே விருது, நடப்பாண்டில் தரப்படும்.. ஹரீஷ் ஹண்டே, 48, கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர். இவர், எரிசக்தித் துறை இன்ஜினியர். அமெரிக்காவில் உள்ள மாசாசூட்ஸ் பல்கலையில், இத்துறையில் பட்டம் பெற்றவர். இவர், லத்தீன் அமெரிக்காவுக்கு சென்ற போது, அங்கு கிராமப்புறப் பகுதிகளில் மின்மயமாக்கும் திட்டம் பற்றி ஆய்வு செய்தார்.சிறிய அளவில் சூரிய சக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி அதன் மூலம் கிராமப்புற மக்கள் பயன்பெறலாம் என முடிவு செய்தார். இதனால் செலவு குறைவு, சுற்றுச் சூழல் மாசில்லாத மின்சாரம், கிராமப்புற மக்கள் மேம்பாடு அமையும் என முடிவு செய்தார். கடந்த, 1955ல், பெங்களூரு வந்து தங்கினார். அவர் தன் குழுவுடன், 'செல்கோ' என்ற அமைப்பைத் துவக்கினார். அதற்கு, 'சோஷியல் என்டர்பிரைஸ் -சோலார் எலக்ட்ரிக் கம்பெனி' என்பது முழுப்பெயர். அடித்தட்டு மக்களும் பயன்பெறும் சூரிய சக்தி கம்பெனி என்ற பொருளுக்கு ஏற்ப, அதிநவீனத் தொழில்நுட்பம் ஏழைகளுக்கும் போய்ச்சேர விரும்பி, அதற்கு உருவாக்கம் கொடுத்து வெற்றியும் பெற்றார். ஏழைமக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள வீடுகளில் மின்சாரப் பயன்பாடுக்கு ஏற்ப, விளக்குகள் அல்லது வாட்டர்ஹீட்டர், தெரு விளக்குகள் அமைப்பதற்கு ஆகும் செலவு, அதை அடையும் வழிவகைகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, செயல்வடிவம் தந்து, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தருவது சுலபம் என வழிகாட்டியவர்; இதற்கு அதிக லாபமும் ஈட்ட விரும்பாதவர். 'செல்கோ' அமைப்பின் மூலம், சுயஉதவிக்குழுக்கள், கிராமப்புற வங்கிகள், பயனீட்டாளர் என எல்லாரையும் இணைத்து அதிநவீனத் தொழில்நுட்ப பயன்களை கிராமங்களுக்கு தந்தவர். அதனால் இவர் பெயர், 'ராமன் மகசசே விருது'க்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. மக்களிடம் இருந்து, வறுமையை அகற்ற வேண்டும். ஏழைகள், என்று வருமானம் ஈட்டும் தகுதி பெறுகின்றனரோ, அப்போது தான் அவர்கள் வாழ்வில் முழு சுதந்திரமும் செல்வாக்கும் கிடைக்கும் என்பது இவரது ஆணித்தரமான வாதம். ஏழை மக்கள் வீடுகளில் சோலார் விளக்குகள் மற்றும் கருவிகள் வருவதின் மூலம், அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திய இவருக்கு, நடப்பாண்டில், ஆசிய நோபல் பரிசு தருவது நமக்கு பெருமை தானே. ஏனெனில், சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயங்களை நாம் தாண்டி வளர்ச்சி அடைந் தாக வேண்டும், அத்துடன், கிராமப்புறங்கள் ஏழ்மை குறைந்து வளம்பெற வேண்டும். இதற்கு வழிகாணும் ஹரீஷ் ஹண்டே, முற்றிலும் வித்தியாசமானவர்.
நமது சிறப்பு நிருபர்

