போட்டியாளரிடம் ஆபாச கேள்வி 'யு டியூபர்' ரன்வீர் மீது வழக்கு
போட்டியாளரிடம் ஆபாச கேள்வி 'யு டியூபர்' ரன்வீர் மீது வழக்கு
ADDED : பிப் 11, 2025 04:35 AM

மும்பை: போட்டியாளர் ஒருவரிடம், ஆபாச கேள்வி கேட்ட பிரபல 'யு டியூபர்' ரன்வீர் அல்லாபாடியா மீது வழக்கு பதிவாகி உள்ளது.
'இந்தியா காட் லேட்டன்ட்' என்ற பெயரில், சமூக வலைதளமான யு டியூபில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள், காமெடி, இசை உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில், பிரபல யு டியூபர் ரன்வீர் அல்லாபாடியா, நடுவர்களில் ஒருவராக பங்கேற்றார். அப்போது, போட்டியாளர் ஒருவரிடம் அருவருக்கத்தக்க வகையில் அவர் கேள்வி கேட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரன்வீர் அல்லாபாடியாவுக்கு கண்டனம் தெரிவித்த பயனர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும், யு டியூபர் ரன்வீர் அல்லாபாடியா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபமானதை அடுத்து, தன் பேச்சுக்கு ரன்வீர் அல்லாபாடியா வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆபாச கேள்வி கேட்ட ரன்வீர் அல்லாபாடியா மீது, அசாமில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருடன் நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்ற ஆஷிஷ் சஞ்ச்லானி, ஜஸ்ப்ரீத் சிங், அபூர்வா மகிஜா, சமய் ரெய்னா ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.