1961க்கு பின் சட்டவிரோதமாக குடியேறிய நபர்கள் நாடு கடத்தப்படுவர்: பைரேன் சிங்
1961க்கு பின் சட்டவிரோதமாக குடியேறிய நபர்கள் நாடு கடத்தப்படுவர்: பைரேன் சிங்
UPDATED : பிப் 14, 2024 09:02 AM
ADDED : பிப் 14, 2024 02:29 AM

இம்பால் : ''பூர்வகுடி மக்களை பாதுகாக்கும் நோக்கில் 1961ம் ஆண்டுக்குபின் மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறிய நபர்களை கண்டறிந்து அவர்களை நாடு கடத்துவோம்'' என மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே இடஒதுக்கீடு தொடர்பாக பெரும் கலவரம் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகினர்.
இந்நிலையில் அவ்வப்போது நம் அண்டை நாடான மியான்மர் எல்லை வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து உள்நாட்டு கலவரங்களை நடத்தி வருவதாக மத்திய மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
சமீபத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மியான்மர் எல்லை பகுதியில் முள் கம்பிகளுடன் கூடிய வேலி அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். எனினும் மணிப்பூரில் உள்ள பழங்குடியினர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிப்பூரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பைரேன் சிங் பேசியதாவது: நம் மாநிலத்தில் உள்ள பூர்வகுடிகளுக்கும் வெளியில் இருந்து குடியேறியவர்களுக்கும் இடையே நீண்ட போராட்டம் நீடித்து வருகிறது. இதற்கு உடனடி தீர்வு காண்பது அவசியம். தற்போது நாம் நம் கடின காலங்களை கடந்து வருகிறோம். நம் அடையாளத்தை பல நுாற்றாண்டுகளாக பாதுகாத்து வரும் சூழலில் அவற்றுக்கு தொலைநோக்கு பார்வை இல்லாத அரசியல்வாதிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே நம் மாநில மக்களின் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு பா.ஜ. அரசு இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 1961க்கு பின் நம் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து குடியேறியவர்கள் ஜாதி மத பேதங்களை கடந்து அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்படுவர். அப்போது தான் நம் பூர்வகுடிகளை காக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

