இரு குழந்தைகள் நீரில் மூழ்கடித்து கொன்ற 'பாசக்கார' தாய் கைது
இரு குழந்தைகள் நீரில் மூழ்கடித்து கொன்ற 'பாசக்கார' தாய் கைது
UPDATED : செப் 30, 2026 07:22 PM
ADDED : செப் 30, 2026 07:13 PM
பாலக்காடு: பாலக்காடு அருகே, வீட்டின் குளியலறை தண்ணீர் தொட்டியில் இரு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அதிர்ச்சியூட்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை தாயே தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றது, விசாரணையில் தெரியவந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை அருகே கள்ளையாற்பாளையம் மணல்காட்டு பகுதியை சேர்ந்தவர் ஜான்குமார்; விறகுவெட்டும் தொழிலாளி. இவரது மனைவி நிவேத்யா, 25. நேற்று முன்தினம் காலை இவர்களது குழந்தைகள் ஜெனிபர் ஜூலியட், 5, ராபின் கிறிஸ்டோபர், 3, இருவரும் குளியலறை தண்ணீர்த் தொட்டியில் அசைவற்ற நிலையில் கிடந்தனர்.
ஜான்குமார் வேலைக்குச் சென்றிருந்தார். நீண்ட நேரமாக குழந்தைகளை காணாமல் தேடிப் பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் மயங்கிக் கிடந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் நிவேத்யா கூறினார். அவர்கள் உதவியுடன் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் இரு குழந்தைகளும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சித்தூர் டி.எஸ்.பி., சசிதரன் தலைமையிலான போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர். தாய் நிவேத்யா முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.
விசாரணையில், இரு குழந்தைகளையும் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்ததாக நிவேத்யா குற்றத்தை ஒப்புக்கொண்டார். அழகுக்கலை படிப்பதற்கு தடையாக இருந்த குழந்தைகளை திட்டமிட்டு கொலை செய்துள்ளது தெரியவந்தது.
