திரிணமுல் அதிருப்தி எம்.பி.,க்கள் 17 பேர் பா.ஜ.,வில் ஐக்கியம்?
திரிணமுல் அதிருப்தி எம்.பி.,க்கள் 17 பேர் பா.ஜ.,வில் ஐக்கியம்?
UPDATED : செப் 14, 2026 08:08 PM
ADDED : செப் 14, 2026 08:03 PM
கொல்கட்டா: இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த திரிணமுல் காங்., அதிருப்தி எம்.பி.,க்கள், 20 பேரில், 17 பேர், பா.ஜ.,வில் விரைவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., படுதோல்வி அடைந்தது. முதன்முறையாக பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வரானார்.
தேர்தல் தோல்வியால், மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகனும், லோக்சபா எம்.பி.,யும், கட்சியின் பொதுச்செயலருமான அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கினர். பலர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இதற்கிடையே, திரிணமுல் காங்கிரசின் மொத்த எம்.எல்.ஏ.,க்கள், 80 பேரில், 60 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரதா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். இதே போல், திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி.,க்கள், 28 பேரில், 20 பேர், தனி அணியாக செயல்பட்டனர். இதனால், மம்தா பானர்ஜி தனித்து விடப்பட்டார்.
இந்த சூழலில், ஜூனில், 20 திரிணமுல் அதிருப்தி எம்.பி.,க்கள், வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் செயல்படும் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்தனர். மேலும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில் நேற்று, கூச் பெஹார் தொகுதி திரிணமுல் அதிருப்தி எம்.பி., ஜெகதீஷ் சந்திர பர்மா பசுனியா கூறியதாவது:
துர்கா பூஜை பண்டிகைக்கு முன்னதாக, நாங்கள், 20 பேரில், 17 பேர் பா.ஜ.,வில் இணைய முடிவு செய்துள்ளோம். மூன்றில் இரு பங்கு எம்.பி.,க்கள் கட்சி மாற உள்ளதால், எங்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாயாது.
அபு தாஹர் கான், கலிலுார் ரஹ்மான், யூசுப் பதான் ஆகியோர், பா.ஜ.,வில் இணைய மாட்டார்கள். எனினும், தே.ஜ., கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பர். அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அல்லது மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
