மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும் போது நாட்டில் வறுமை ஒழியும்: ராஜ்நாத் சிங் பேச்சு
மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும் போது நாட்டில் வறுமை ஒழியும்: ராஜ்நாத் சிங் பேச்சு
ADDED : மார் 09, 2024 04:49 PM

ராய்ப்பூர்: பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும் போது நாட்டில் வறுமை ஒழியும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இதை நான் சொல்லவில்லை. நிடி ஆயோக் அமைப்பு தான் கூறுகிறது. மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி அமையும் போது ஒருவரைக் கூட வறுமைக் கோட்டின் கீழ் வாழ அனுமதிக்க மாட்டோம். மொத்தமாக நாட்டில் வறுமை ஒழியும்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் எதிர்காலத்தை மாற்ற, மாநில விவசாயிகளின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும். 2014ம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் விவசாய பட்ஜெட் 25,000 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது பாஜ ஆட்சியில் 1,25,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் சத்தீஸ்கர் மாநிலம் அதிவேகமாக வளர்ச்சியடையும் என்று நான் நம்புகிறேன். எனது அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

