ADDED : ஜூலை 21, 2025 12:11 AM
மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சத்கா கிராய் எனப்படும் பிராந்தியத்தை நேற்று சக்திவாய்ந்த மூன்று நிலநடுக்கங்கள் தாக்கின. இதனால் அமெரிக்க புவியியல் துறை சுனாமி எச்சரிக்கை விடுத்தது.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள பெரிய பிராந்தியம் கம்சத்கா கிராய். இதன் தலைநகரில் இருந்து 140 கி.மீ., அப்பால் உள்ள பகுதியை மையமாக வைத்து நேற்று காலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இது 10 கி.மீ., ஆழத்தில் உருவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 மற்றும் 6.4 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து பிற்பகலில், 7.4 ரிக்டர் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. சேத விபரங்கள் குறித்து ரஷ்ய அவசரகால சூழல் துறை ஆய்வு செய்து வருகிறது. மூன்றாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க புவியியல் துறை சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 300 கி.மீ., சுற்றளவில் கடும் சுனாமி அலைகள் ஏற்படும் என கூறியது. ரஷ்யாவின் அவசரகால அமைச்சகமும் சுனாமி எச்சரிக்கை வெளியிட்டது, கடலோர குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கரையிலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தியது.
கடந்த 1952ல் ரஷ்யாவின் இதே பிராந்தியத்தில் 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அமெரிக்காவின் ஹவாய் கடற்கரையில் 30 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின.