சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிக்கு சூர்யகாந்தை பரிந்துரைத்தார் பி.ஆர்.கவாய்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிக்கு சூர்யகாந்தை பரிந்துரைத்தார் பி.ஆர்.கவாய்
ADDED : அக் 28, 2025 02:43 AM

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி சூர்யகாந்தை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின், 52வது தலைமை நீதி பதியாக கடந்த மே 14ல், பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.
இவரது பதவிக்காலம், நவ., 23ல் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகம் அவரிடம் கேட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி சூர்யகாந்தை நியமிக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று பரிந்துரைத்தார்.
நவ., 24ல், 53வது தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி சூர்யகாந்த் பதவியேற்க உள்ளார். இவர், 2027 பிப்., 9 வரை தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
யார் இந்த சூர்யகாந்த்? ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில், 1962- பிப்., 10-ல் பிறந்த சூர்யகாந்த், அம்மாநிலத்தில் இருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நபர்.
மிக இளம் வயதில், ஹரியானா அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2004ல், ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் பொறுப்பேற்றார்.
கடந்த, 2018, அக்டோபரில், ஹி மாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019, மே 24ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சூர்யகாந்த், நவ., 24ல், தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
முக்கிய தீர்ப்புகள் ஜம்மு- - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு - 370 நீக்கம், பேச்சு சுதந்திரம், ஜன நாயகம், ஊழல், சுற்றுச்சூழல், பாலின சமத்துவம் தொடர்பான வழக்குகளில், முக்கிய தீர்ப்புகளை நீதிபதி சூர்யகாந்த் வழங்கி உள்ளார்.
பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட, 65 லட்சம் பேரின் விபரங்களை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது; உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் உட்பட அனைத்து வழக்கறிஞர் சங்கங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவுகளையும் இவர் பிறப்பித்து உள்ளார்.
- டில்லி சிறப்பு நிருபர் -:

