4 மணி நேர பயணத்துக்கு 12 மணி நேரம் பக்தர்களால் ஸ்தம்பித்தது பிரயாக்ராஜ்
4 மணி நேர பயணத்துக்கு 12 மணி நேரம் பக்தர்களால் ஸ்தம்பித்தது பிரயாக்ராஜ்
ADDED : பிப் 12, 2025 01:28 AM

மஹா கும்ப நகர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் பங்கேற்க, பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் அம்மாவட்டமே ஸ்தம்பித்தது. கடும் போக்குவரத்து நெரிசலால், 4 மணி நேர அயோத்தி - பிரயாக்ராஜ் பயணம் தற்போது 12 மணி நேரமாகி உள்ளது.
உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்வு, ஜன., 13ல் துவங்கியது. வரும் 26 வரை இந்நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இதுவரை, 44 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர்.
கடும் நெரிசல்
உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மஹா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமியை தொடர்ந்து, கும்பமேளாவில் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்கள் கூட்டம் அதிகரித்தபடியேதான் உள்ளது.
வார விடுமுறை நாட்களான கடந்த 8, 9ல், பிரயாக்ராஜுக்கு வாகனங்களில் மக்கள் படையெடுத்ததால், 300 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரயாக்ராஜுக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் சாரை சாரையாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மக்கள் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்றும், பிரயாக்ராஜில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரயாக்ராஜ், அயோத்தி, காசியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில், வாகனங்கள் மணிக்கணக்கில் சிக்கித் தவித்தன.
முன்னெப்போதும் இல்லாத வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், பிரயாக்ராஜ் மாவட்டமே ஸ்தம்பித்து போனது.
அயோத்தியில் இருந்து பிரயாக்ராஜுக்கு புறப்பட்ட பக்தர் ஒருவர் கூறுகையில், “இதுவரை 40 கி.மீ., மட்டுமே கடந்துள்ளோம். நேற்று இரவு 7:00 மணி முதல், டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்டோம். ஓர் அங்குலம் கூட காரை நகர்த்த முடியவில்லை.
வாகனங்களுக்கு தடை
''இதனால், காரிலேயே நாங்கள் துாங்கி விட்டோம். வழக்கமாக, அயோத்தியில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல நான்கு மணி நேரம் ஆகும். ஆனால் தற்போது, 12 மணி நேரமாகிறது,” என்றார்.
பிரயாக்ராஜில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மக பவுர்ணமியையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுவர் என்பதால், வாகனங்கள் தடை செய்யப்பட்ட மண்டலமாக, பிரயாக்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரயாக்ராஜில் இன்று வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்றும், அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.