இலங்கை பார்லி., தேர்தலில் அதிபர் அனுரா கட்சி அபாரம் ! 225 இடங்களில் 159ஐ கைப்பற்றி வரலாற்று வெற்றி
இலங்கை பார்லி., தேர்தலில் அதிபர் அனுரா கட்சி அபாரம் ! 225 இடங்களில் 159ஐ கைப்பற்றி வரலாற்று வெற்றி
ADDED : நவ 15, 2024 11:30 PM

கொழும்பு: இலங்கை பார்லிமென்டுக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 225 இடங்களில், 159 இடங்களை கைப்பற்றி, அதிபர் அனுரா குமார திசநாயகேவின் தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளையும் கைப்பற்றி, அக்கட்சி சாதனை படைத்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்று அதிபரானார். உடனே, பார்லிமென்டை கலைத்த அவர், நவ., 14ல் தேர்தலை நடத்த உத்தரவிட்டார்.
மொத்தம் 225 எம்.பி.,க்கள் உடைய இலங்கை பார்லி.,யில், 196 எம்.பி.,க்களை மக்கள் ஓட்டளித்து தேர்வு செய்வர். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற ஓட்டு சதவீதத்தின்படி, விகிதாசார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். பெரும்பான்மைக்கு, 113 இடங்கள் தேவை.
இந்நிலையில், இலங்கை பார்லி., தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதன்படி, அதிபர் அனுரா குமார திசநாயகேவின் தேசிய மக்கள் கட்சி, மொத்தமுள்ள 225 இடங்களில், 159 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
பார்லி.,யில், மூன்றில் இரு பங்கு இடங்களை அக்கட்சி பெற்றுள்ளது. இதில், ஓட்டு சதவீதத்தின்படி, விகிதாசார அடிப்படையில், தேசிய மக்கள் கட்சிக்கு 18 இடங்கள் கிடைத்துள்ளன.
இந்த தேர்தலில், 61 சதவீத ஓட்டுகளை அக்கட்சி பெற்றுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், வன்னி, திரிகோணமலை, மன்னார், வவுனியா உள்ளிட்ட இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாசாவின் சமகி ஜன பலவேகயா கட்சி - 40; முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி - 5 இடங்களையும் கைப்பற்றின.
பார்லி.,யில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளதால், அரசியலமைப்பு சட்டங்களில் திருத்தம் போன்றவற்றை அதிபர் அனுரா குமார திசநாயகேவால் எளிதாக செய்ய முடியும். புதிய பார்லி.,யின் முதல் கூட்டம் அடுத்த வாரம் நடக்கவுள்ளது.