நம் ராணுவம் தற்சார்பு அடைந்ததே ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிக்கு காரணம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம்
நம் ராணுவம் தற்சார்பு அடைந்ததே ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிக்கு காரணம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம்
UPDATED : ஜன 26, 2026 10:17 AM
ADDED : ஜன 26, 2026 01:37 AM

புதுடில்லி: “பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்கு, நம் ராணுவம் தற்சார்பு அடைந்ததே காரணம்,” என ஜனாதிபதி திரவு பதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவையொட்டி நேற்று, நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை: பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி தரும் வகையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவ இலக்குகள் மற்றும் பயங்கரவாத உட்கட்டமைப்புகள் மீது நம் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
பிரம்மோஸ் ஏவுகணையை செலுத்தி எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக அழித்தது.
உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட வான் பாதுகாப்பு வலையமைப்பு மூலம் எதிரிகளை நிலைகுலைய வைத்தது என, பல அதிரடி நடவடிக்கைகள் மெச்சும்படியாக இருந்தன.
பயங்கரவாதத்திற்கு எதிராக நம் ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை, மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. நம் பாதுகாப்பு துறை தற்சார்பு அடைந்ததே 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை இந்த அளவுக்கு வரலாற்று வெற்றியை ஈட்ட காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

