மனநல சிகிச்சைக்கு யோகா, ஆயுர்வேதம் பின்பற்றுவது வரவேற்கத்தக்கது நிமான்ஸுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு
மனநல சிகிச்சைக்கு யோகா, ஆயுர்வேதம் பின்பற்றுவது வரவேற்கத்தக்கது நிமான்ஸுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு
ADDED : ஜன 04, 2025 07:43 AM

பெங்களூரு: ''மனநலம், நரம்பியல் தொடர்பான மருத்துவ சிகிச்சையில் நிமான்ஸ் சிறந்து விளங்குகிறது. சிகிச்சைக்கு யோகா மற்றும் ஆயுர்வேதம் நடைமுறைகளையும் பின்பற்றுவது வரவேற்கத்தக்கது,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
பெங்களூரின் நிமான்ஸ் மருத்துவமனையின் பொன் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:
மனநலம், நரம்பியல் தொடர்பான மருத்துவ சிகிச்சையில் நிமான்ஸ் சிறந்து விளங்குகிறது. சிகிச்சைக்கு யோகா மற்றும் ஆயுர்வேதம் நடைமுறைகளையும் பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. எதிர்மறையான மனநிலையை சமாளிக்க பல்வேறு வகையான தியானங்களும் பயனளிக்கின்றன. இவை மன நலம், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.
ஆணி வேர்
அனைத்திற்கும் ஆணிவேராக இருப்பது மனம் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து வரும் நாட்களில் அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முந்தைய காலத்தில் மனநலத்தில் மக்கள் அக்கறை காட்டவில்லை. மனநோய்கள் தொடர்பான விவேகமற்ற நம்பிக்கைகள் இருந்தன. சமீப நாட்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மன நோய்கள் உலகம் முழுவதும் தொற்றுநோய்களை அதிகரிக்கின்றன. குறிப்பாக கொரோனா உள்ளிட்ட தொற்றுநோய்களால், உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வைத்தது.
இன்றைய காலத்தில் பணியில் உள்ளவர்கள், அதிக மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளனர். மூத்த குடிமக்கள் பல பிரச்னைகளுடன், தனிமையில் அவதிப்படுகின்றனர். வீட்டு பொறுப்புகளையும் குடும்ப பராமரிப்பை சுமக்கும் பெண்கள், தங்களை அறியாமல் மனநோயால் பாதிப்படைகின்றனர்.
தற்போதைய விழிப்புணர்வால், தங்களின் பிரச்னைகளை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இம்மருத்துவமனை, சிறார்கள், மூத்த குடிமக்கள் என பலரின் மனநல பிரச்னைகளை குணப்படுத்துகிறது. ஆரோக்கியமான குடும்பம், ஆரோக்கியமான சமுதாயத்தின் அஸ்திவாரமாகும்.
நிமான்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தில், இளங்கலை மாணவர்களில் 79.7 சதவீதமும், முதுகலை மாணவர்களில் 61.4 சதவீதமும் பெண்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
புகழாரம்
மத்திய அமைச்சர் நட்டா பேசியதாவது:
உலகின் மிக சிறந்த 200 மருத்துவமனைகளில், நிமான்சும் ஒன்று. இந்த மருத்துவமனையில் ஆண்டுதோறும் ஏழு லட்சம் மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு புதிதாக சில சிகிச்சைகள் துவங்கப்பட்டுள்ளன.
பா.ஜ., அரசு, பல சுகாதார திட்டங்களை செயல்படுத்தின. மருத்துவ சிகிச்சைகளில், நிமான்சுக்கு நிகர் நிமான்ஸ்தான். 50 ஆண்டு நீண்ட பயணத்தில், இதன் தியாகம், அர்ப்பணிப்பு நினைவுகூரத்தக்கது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான, நிமான்ஸ் மேம்பாட்டுக்காக திட்டத்தை, அதிகாரிகள் தயாரிக்க வேண்டும்.
நிமான்சின் டெலி கன்சல்டேஷன் சேவை, மிகவும் பாராட்டத்தக்கது. ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற மாணவர்களை, மருத்துவ சேவைக்கு நிமான்ஸ் அனுப்புகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

