ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
ADDED : ஜன 26, 2025 03:06 AM

புதுடில்லி: ''ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை என்பது, சிறந்த அரசு நிர்வாகத்தை மேலும் சீரமைக்கும். அரசின் செயல்பாடுகள் அதிகரிப்பதுடன், கூடுதல் நிதி பளுவை குறைத்து, ஆதாரங்கள் வீணாவதை தடுக்கும்,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு குறிப்பட்டார்.
குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ரேடியோவில் நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:
பல ஆண்டுகளாக காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து வரும் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டன.
அதில் ஒன்றாகத்தான், நுாறாண்டுகளுக்கு மேலாக இருந்த மூன்று கிரிமினல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்ள, தீவிரமான மற்றும் உறுதியான தொலைநோக்கு பார்வை தேவை. இந்த வகையில், நாட்டின் தேர்தல் முறைகளில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்யும், ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை முக்கியமானது.
இந்த முறையானது, சிறந்த நிர்வாகத்தை மாற்றி அமைக்கும். நீடித்த சிறந்த நிர்வாகம், கொள்கை நடவடிக்கைகள் முடங்குவதை தடுப்பது, ஆதாரங்கள் வீணாவதை தடுப்பது, மாநிலங்களுக்கு நிதிச் சுமை ஏற்படுவதை தடுப்பது போன்றவற்றை உறுதி செய்யும்.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டை கொண்டாடுகிறோம். இது மிகவும் முக்கியமான நிகழ்வு. நாடு சுதந்திரம் அடைந்தபோது, நாட்டில் கடுமையான வறுமை மற்றும் பட்டினி இருந்தது.
ஆனால், நாம் நம் மீது வைத்திருந்த நம்பிக்கையால், வளர்ச்சியை உறுதி செய்தோம். இதில், விவசாயிகள், தொழிலாளர்கள் என, ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர். தற்போது உலகின் மிகப் பெரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக வளர்ந்துள்ளோம்.
இந்த வளர்ச்சியை எட்டுவதற்கு, நமக்கு அரசியலமைப்பு உதவியுள்ளது. அனைத்துத் தரப்பினருக்கும் உரிய உரிமைகள், பிரதிநிதித்துவம் கிடைப்பதை அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும், அனைவரின் வளர்ச்சியையும் கொள்கையாக கொண்டு இந்த அரசு செயல்படுகிறது.
ஒரு நாட்டின் வரலாற்றில், 75 ஆண்டுகள் என்பது கண்ணசைக்கும் காலத்தைப் போன்றது என்று கூறுவர். ஆனால், இந்த, 75 ஆண்டுகளே, உலக அரங்கில் நம்முடைய இடத்தை உறுதி செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.