ரபேல் போர் விமானத்தில் பறந்து ஜனாதிபதி சாகசம்; 15,000 அடி உயரத்தில் 30 நிமிடங்கள் பயணம்
ரபேல் போர் விமானத்தில் பறந்து ஜனாதிபதி சாகசம்; 15,000 அடி உயரத்தில் 30 நிமிடங்கள் பயணம்
ADDED : அக் 30, 2025 12:30 AM

அம்பாலா: நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்கனவே, கடந்த 2023ல் சுகோய் போர் விமானத்தில் பறந்து சாகசம் புரிந்திருந்த நிலையில், ரபேல் போர் விமானத்தில் நேற்று பயணித்ததன் வாயிலாக, இரு போர் விமானங்களில் பறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.
பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, கடந்த மே 7ம் தேதி, 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பேரழிவு அதில், ஐரோப்பிய நாடான பிரான்ஸின், 'டஸ்ஸால்ட் ஏவியேஷன்' நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள் முக்கிய பங்கு வகித்தன.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இயங்கி வந்த பயங்கரவாத அமைப்புகள், அதன் உள்கட்டமைப்புகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தி, ரபேல் போர் விமானங்கள் பேரழிவை ஏற்படுத்தின.
இந்நிலையில், தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்த போர் விமானத்தில் நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று பயணம் செய்து புதிய சாதனை படைத்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்வதற்காக, ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள நம் விமானப் படை தளத்தில் ரபேல் போர் விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
மரியாதை இதைத் தொடர்ந்து, நேற்று காலை டில்லியில் இருந்து புறப்பட்டு, அம்பாலா வந்தடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விமானப் படை சார்பில் முழு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதன் பின், போர் விமானிகள் உடை அணிந்து கம்பீர நடையுடன், ரபேல் போர் விமானத்தில் ஏறிய ஜனாதிபதி முர்மு, சுமார் அரை மணி நேரம் வரை வானில் பறந்தார்.
அவரது ரபேல் போர் விமானம் கடல் மட்டத்தில் இருந்து 15,000 அடி உயரத்தில் மேலே எழும்பி, மணிக்கு, 700 கி.மீ., வேகத்தில் பறந்தது. சரியாக, 200 கி.மீ., துாரம் வரை பறந்த பின், அவர் மீண்டும் அம்பாலா விமானப் படை தளத்தில் தரையிறங்கினார்.
சாதனை இந்த பயணம் குறித்து ஜனாதிபதி முர்மு கூறியதாவது:
ரபேல் போர் விமானத்தில் பறந்தது மறக்க முடியாத அனுபவம். சக்தி வாய்ந்த ரபேல் போர் விமானத்தில் பறந்தது மிகுந்த பெருமையை தருகிறது.
இந்த பயணத்திற்காக ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்து முடித்த நம் விமானப் படை மற்றும் அம்பாலா விமானப் படை தளத்தின் குழுவினரை வெகுவாக பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ரபேல் போர் விமானத்தின் செயல்பாட்டு திறன்கள் குறித்தும் அவருக்கு விமானப் படை குழுவினர் விரிவாக விளக்கினர்.
இதற்கு முன், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த 2006, ஜூன் 8ல் புனே அருகே உள்ள லோஹே காவ் விமானப் படை தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் பயணித்தார்.
அவருக்குப் பின் 2009, நவ., 25ல் அப்போதைய ஜனாதிபதியான பிரதீபா பாட்டீலும் சுகோய் 30 ரக போர் விமானத்தில் பறந்தார்.
இவர்களை தொடர்ந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி என்ற சாதனையை கடந்த 2023 ஏப்ரலில், திரவுபதி முர்மு படைத்திருந்தார்.
தற்போது ரபேல் விமானத்திலும் பறந்ததன் மூலம், இரு போர் விமானங்களில் பயணித்த முதல் ஜனாதிபதி என்ற சாதனையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.
பாக்., முகத்திரையை
கிழித்த ஜனாதிபதி
ரபேல் போர் விமானத்தில் பறந்த நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமானப் படை விமானி ஷிவாங்கி சிங்குடன் மிடுக்காக புகைப்படம் எடுத் துக் கொண்டு, பாகிஸ்தான் பரப்பிய பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, ரபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாகவும், அதை ஓட்டி வந்து பாராசூட் மூலம் கீழே குதித்த விமானி ஷிவாங்கி சிங்கை பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது. இந்நிலையில், நேற்று அம்பாலா சென்ற நம் ஜனாதிபதி முர்மு, விமானி ஷிவாங்கி சிங்குடன் மிடுக்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்து, பாகிஸ்தானின் பொய்களை தவிடு பொடியாக்கினார். ஷிவாங்கி சிங், ரபேல் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

