உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க அதிபர்கள் டிரம்ப் - புடின் வரும் 15ல் சந்திப்பு
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க அதிபர்கள் டிரம்ப் - புடின் வரும் 15ல் சந்திப்பு
ADDED : ஆக 10, 2025 01:17 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வரும் 15ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்து உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க உள்ளனர்.
ஐரோப்பிய நாடான உக்ரைன், 'நேட்டோ' எனப்படும், சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் இணைய முயற்சித்தது. இதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதில் உக்ரைன் இணைந்தால், தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து எனக்கூறி அந்நாட்டிற்கு எதிராக, 2022 பிப்ரவரியில் ரஷ்யா போரை துவங்கியது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்த போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் வினியோகம், உணவுப்பொருள் வினியோகம், பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த போரில் உக்ரைனுக்கு இதுவரை, 5.75 லட்சம் கோடி ரூபாய் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இதனால் போர் தொடர்வது அமெரிக்க பொருளாதாரத்திற்கும் சுமையாக உள்ளது. எனவே, உக்ரைன் - -ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார்.
ஜனவரியில் இரண்டாவது முறையாக பதவியேற்ற உடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அழைத்து வெள்ளை மாளிகையில் சந்தித்தார். 'போர் நிலவரத்தை மேலும் சிக்கலாக்கக் கூடாது' என அவரிடம் வெளிப்படையாக கண்டித்தார்.
ரஷ்ய அதிபர் புடினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு போரை நிறுத்துவது குறித்து பேசியுள்ளார். அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
ஆகஸ்ட் 8க்குள் போரை நிறுத்த டிரம்ப் கெடு விதித்தார். இல்லையென்றால் மேலும் பல பொருளாதார தடைகள் விதிக்கப்படும், என்றார்.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப் உடன், ரஷ்ய அதிபர் புடின் சமீபத்தில் சந்திப்பு நடத்தினார். இவர், ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்தவர்.
இந்த சந்திப்புக்கு பின், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க ரஷ்ய அதிபர் புடின் ஒப்புக்கொண்டார். சந்திப்புக்கு ரஷ்யா சார்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அரசு பாதுகாப்பு மற்றும் துாதரக விவகாரங்களை கவனத்தில் கொண்டு, உள்நாட்டிலேயே சந்திப்பு நடக்க வேண்டும் என அழுத்தம் தந்தது.
அதன்படி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், டிரம்ப் - புடின் வரும் 15ம் தேதி சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். இதை, டிரம்ப் தன் சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த சந்திப்பில், போர் நிறுத்தம் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், உக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதை ரஷ்யா ஏற்கவில்லை. புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சு நடத்த வாய்ப்பே இல்லை என கூறிவிட்டது.
மறுவரையறை செய்யப்படும்! போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு சில பகுதிகள் கிடைக்கும். சில பகுதிகளை வழங்க வேண்டியிருக்கும். இரு நாடுகளின் முன்னேற்றத்திற்காக, எல்லைகளை மறுவரையறை செய்யப்படும். டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர்
போரை நிறுத்த முடியாது! ரஷ்யா எங்கள் நிலத்தில் எங்கள் மக்களுக்கு எதிராக போரை நடத்துகிறது. போர் நிறுத்த பேச்சு எங்கோ தொலைவில் நடக்க உள்ளது. இந்தப் போரை எங்களைத் தவிர வேறு யாராலும் முடிவுக்கு கொண்டுவர முடியாது. உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரானவை. அவை எதையும் சாதிக்காது. வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் அதிபர்