'யு டியூப்' கணக்கை நீக்கிய விவகாரம்: ரூ.212 கோடி டிரம்புக்கு இழப்பீடு
'யு டியூப்' கணக்கை நீக்கிய விவகாரம்: ரூ.212 கோடி டிரம்புக்கு இழப்பீடு
ADDED : அக் 01, 2025 03:03 AM

கலிபோர்னியா: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 'யு டியூப்' கணக்கை நீக்கிய விவகாரத்தில் அவருக்கு 212 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அதன் தாய் நிறுவனமான 'கூகுள்' ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2020ல் நடந்த அதிபர் தேர்தலில், அப்போது அதிபராக இருந்த குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, டிரம்ப் ஆதரவாளர்கள் 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் டிரம்பின் யு டியூப் பக்கமும் அடங்கும். இதனை எதிர்த்து டிரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வழக்கை சுமுகமாக முடித்து கொள்ள அதிபர் டிரம்புக்கு, 212 கோடி ரூபாயை இழப்பீடாக செலுத்த யு டியூபின் தாய் நிறுவனமான கூகுள், நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை, வரும் 6ம் தேதி பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக சமரசம் பேசப்பட்டுள்ளது.
டிரம்பின் வெள்ளை மாளிகையின் சமீபத்திய கட்டுமானத் திட்டத்திற்கு, இந்தப் பணம் நன்கொடை போன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், அமெரிக்க கன்சர்வேடிவ் சங்கம் உள்ளிட்ட டிரம்ப் தொடர்பான அமைப்புகளுக்கு, 22 கோடி ரூபாய் வழங்கவும் கூகுள் ஒப்புக் கொண்டுள்ளது.