10 ஆண்டில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து பிரதமர்... பெருமிதம்! சாதனைகள் அடங்கிய இசை ஆல்பம் வெளியீடு
10 ஆண்டில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து பிரதமர்... பெருமிதம்! சாதனைகள் அடங்கிய இசை ஆல்பம் வெளியீடு
ADDED : மார் 17, 2024 03:23 AM

புதுடில்லி :  'கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே பா.ஜ., ஆட்சியின் மகத்தான சாதனை' என பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் அமைந்துள்ள  பா.ஜ., அரசு செய்துள்ள சாதனைகள் அடங்கிய இசை ஆல்பத்தையும் பிரதமர் வெளியிட்டார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.,வை வீழ்த்த முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து காங்கிரஸ் தலைமையில், 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இதில் உள்ள தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு குடும்பமே இல்லை என தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாட்டு மக்களே என் குடும்பம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
என் குடும்பம்
'என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், நாட்டின் 140 கோடி மக்களும் என் குடும்பம், நாட்டின் கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள், சகோதரிகள் மோடியின் குடும்பம். நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையும் என் குடும்பம்.
யாருமில்லாதவர்கள், அவர்களும் மோடியைச் சேர்ந்தவர்கள். மோடி, அவர்களுக்குச் சொந்தமானவர்' என கூறினார். இது தொடர்பான 'மோடி கா பரிவார்' என பிரசாரம் நாடு முழுதும் பிரபலமடைந்தது.
இந்நிலையில், தன் சமூக வலைதள பக்கத்தில், இது தொடர்பான 'வீடியோ' ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன், 'என் பாரதம், என் குடும்பம்' என்ற தலைப்பில் மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், பிரதமராக மோடி பதவியேற்றது முதல், கடந்த 10 ஆண்டு களில் நாட்டு மக்களுக்கு செய்த சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
ஏழைகள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், குழந்தைகள் என, அனைத்து தரப்பினருடனும் பிரதமர் மோடி உள்ள காட்சிகள் இசை ஆல்பமாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.
'மை மோடி கா பரிவார் ஹூ' அதாவது 'நான் மோடியின் குடும்பம்' என ஒவ்வொரு இந்தியரும் சொல்லும் வகையில் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் துவங்கி, கன்னியாகுமரி வரை அனைத்து மாநில மொழி மக்களும் நான் மோடியின் குடும்பம் என, அதில் உணர்ச்சி பொங்க கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வரும் பா.ஜ., தலைவர்கள், இது தொடர்பாக மக்களுக்கு மோடி எழுதிய கடிதத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
அன்புள்ள என் குடும்ப உறுப்பினர்களே... நம் கூட்டணி, 10 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும் வாசலில் உள்ளது. நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் ஆதரவு, எனக்கு ஊக்கமும், புத்துணர்வையும் அளிக்கிறது.
பல்வேறு மாற்றங்கள்
ஏழைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஓர் உறுதியான அரசு மேற்கொண்ட நேர்மையான முயற்சியின் விளைவாகத் தான், நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம், குடிநீர், எரிவாயு திட்டம், இலவச மருத்துவம், விவசாயிகளுக்கு நிதியுதவி, பெண்கள் நல திட்டங்கள் என அனைத்தும் வெற்றிகரமாக சாத்தியமாக்கப்பட்டுள்ளன.
இதனாலேயே நீங்கள் அனைவரும் என்னை உங்களுக்குள் வைத்துஉள்ளீர்கள்.
நம் தேசம் பாரம்பரியம், நவீனத்துவம் இரண்டையும் கைகோர்த்து முன்னேறி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், அடுத்த தலைமுறைக்கும் தேவையான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நமது வளமான தேசிய மற்றும் கலாசார பாரம்பரியம் புத்துயிர் பெற்றுஉள்ளது.
ஜி.எஸ்.டி., அமலாக்கம், சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் தொடர்பான புதிய சட்டம், பெண்களுக்கான இடஒதுக்கீடு, பார்லிமென்டில் அவர்களின் பங்கேற்பை மேம்படுத்துதல், புதிய பார்லி., திறப்பு  என, பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையாலேயே சாத்தியமானது.
அந்த நம்பிக்கையின் அளவுகோல் இந்த சாதனைகளை செய்ய வைத்தது.
நாம் தொடர்ந்து இணைந்து தேசத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்வோம் என, உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

