ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி!
ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி!
ADDED : மார் 20, 2024 04:18 PM

புதுடில்லி: ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
ரஷ்யாவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 15ம் தேதி அங்கு நடந்தது. இதில், தற்போதைய அதிபரான விளாடிமிர் புடின், 71, போட்டியிட்டார். 88 சதவீத ஓட்டுகள் பெற்று அவர் வெற்றி பெற்றதை அடுத்து, அந்நாட்டின் புதிய அதிபராக ஐந்தாவது முறையாக புடின் தேர்வானார்.
இதன் வாயிலாக, ரஷ்ய வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளில், நீண்ட காலம் பதவி வகிக்கும் அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீண்டும் அதிபர் ஆகியுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தேன். வரும் ஆண்டுகளில் இந்தியா- ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற நாங்கள்  ஒப்புக்கொண்டுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

