UPDATED : பிப் 10, 2025 10:13 PM
ADDED : பிப் 10, 2025 01:03 PM

புதுடில்லி: அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். பாரீஸில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
. இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர், அமெரிக்கா செல்ல உள்ளார்.
பிரான்ஸ் கிளம்புவதற்கு முன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் 10 முதல் 12 தேதிகளில் பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். பாரிசில் நடக்கும் ஏ.ஐ., செயல் மாநாட்டில் இணை தலைமையேற்க ஆர்வமுடன் உள்ளேன். இம்மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச தொழில்நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கின்றனர். புதுமை மற்றும் பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள உள்ளோம்.
இந்த பயணமானது, இந்தியா பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பில் உள்ள வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். தொடர்ந்து, இருவரும் பிரான்சின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான மார்சீலி நகர் சென்று, இந்திய துணைத்தூதரக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளேன். பின்னர், தெர்மோநியூக்ளியர் அணுஉலை ஆராய்ச்சி மையத்திற்கும் செல்வதுடன் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளேன்.
இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, அதிபர் டிரம்ப் அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்கிறேன். அங்கு, எனது நண்பர் டிரம்ப்பை சந்திக்க ஆவலாக உள்ளேன். அவர் அதிபரான பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். அவரது முதலாவது ஆட்சிக்காலத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சர்வதேச ஒத்துழைப்பிற்கு இணைந்து பணியாற்றியது நினைவில் உள்ளது.
என்னுடைய எனது பயணமானது, தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் உயர்த்தவும்,அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். நமது இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். மேலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.