காயமடைந்தோரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்
காயமடைந்தோரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்
ADDED : நவ 13, 2025 02:48 AM
புதுடில்லி: டில்லியில், கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறு வோரை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தலைநகர் டில்லியில், உயர் பாதுகாப்புள்ள செங்கோட்டை பகுதியில், கடந்த 10ம் தேதி மாலை, போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் திடீரென வெடித்து சிதறியது.
இதில், அருகிலிருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இச்சம்பவத்தில், 12 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள், லோக் நாயக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, 10ம் தேதி காலை, ஹரியானாவின் பரிதாபாதில், 3,000 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று டாக்டர்கள் கைதான நிலையில், இச்சம்பவம் அரங்கேறியது, பயங்கரவாத தாக்குதல் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது.
வெடித்து சிதறிய காரை ஓட்டியவர், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பதும், பரிதாபாதில் கைதான டாக்டர்களுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது.
குண்டு வெடிப்பில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்ட நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக, அண்டை நாடான பூடானுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. இந்த சதி வேலையில் ஈடுபட்டோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும்' என உறுதியளித்தார்.
பூடான் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, டில்லிக்கு நேற்று வந்தார். லோக் நாயக் அரசு மருத்துவமனைக்கு உடனே சென்ற அவர், குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மருத்துவமனையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

