டாக்டர்களை பயங்கரவாதிகளாக மாற்றிய முக்கிய சதிகாரன் கைது
டாக்டர்களை பயங்கரவாதிகளாக மாற்றிய முக்கிய சதிகாரன் கைது
ADDED : நவ 13, 2025 01:32 AM

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கைதான இமாம் இர்பான் அகமது, பயங்கரவாதத்திற்கு டாக்டர்கள் நெட்வொர்க்கை உருவாக்கிய முக்கிய சதிகாரன் என்பது தெரியவந்துள்ளது.
டில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர்களை பயங்கரவாத வலையில் விழ வைத்ததன் பின்னணியில், ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த இமாம் இர்பான் அகமது இருப்பது தெரியவந்துள்ளது.
இமாம் ஆக மாறுவதற்கு முன், ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் துணை மருத்துவ ஊழியராக இர்பான் அகமது பணியாற்றி இருக்கிறார்.
அப்போது தான், தன்னிடம் நெருக்கமாக பழகிய டாக்டர்களை மூளை சலவை செய்து பயங்கரவாத பாதைக்கு திசை திருப்பி உள்ளார்.
அதன் பின் நவ்காம் மசூதியில் இமாமாக பணியாற்றிய இர்பான் அகமது, தொழுகைக்கு வரும் மருத்துவக் கல்லுாரி மாணவர்களுடன் நெருங்கி பழகி இருக்கிறார்.
அப்படி நெருக்கமாக பழகியவர்களின் மனதில் பயங்கரவாத எண்ணத்தை விதைத்த இர்பான், பரிதாபாதை மையமாக கொண்டு டாக்டர்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளார்.
அப்படி தான் இவரது வலையில் டாக்டர்கள் முஸாம்மில் ஷகீல், முகமது உமர் ஆகியோர் விழுந்துள்ளனர்.
செங்கோட்டையில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய டாக்டர் உமர், இமாம் இர்பான் அகமதுவுடன் நெருக்கமாக பழகியவர் என தெரிய வந்துள்ளது.
அதே போல் அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றிய டாக்டர் ஷாஹீன் சயீதும் பயங்கரவாத எண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, முக்கிய பைனான்சியராக உருவாகி இருக்கிறார். தவிர, ஜெய்ஷ் - இ - முகமது பெண் பயங்கரவாத பிரிவான ஜமாத் - உல் - மொமினாத்துக்கு இவர் தான் தலைவர் என்றும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளிடமும் அகமது தொடர்பில் இருந்துள்ளார். மருத்துவ மாணவர்கள் மனதில் பயங்கரவாத சிந்தனையை வளர்ப்பது தான் இவரது முழு நேர பணியாக இருந்துள்ளது.

