ADDED : டிச 11, 2025 09:01 PM

புதுடில்லி: டிசம்பர் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பின் பேரில், டிசம்பர் 15ம் தேதி முதல் 16ம் தேதி வரை ஜோர்டான் நாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார்.இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, இந்தியாவிற்கும் ஜோர்டானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்து அந்நாட்டு மன்னருடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவையும் இந்தப் பயணம் குறிக்கிறது.
எத்தியோப்பியா
பின்னர், டிசம்பர் 16ம் முதல் 17ம் தேதி வரை, பிரதமர் டாக்டர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி எத்தியோப்பியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது எத்தியோப்பியா கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசிற்கு பிரதமர் மோடியின் முதல் பயணமாகும்.
ஓமன்
இந்த பயணம் முடிந்த பிறகு, டிசம்பர் 17ம் தேதி முதல் 18ம் தேதி வரை, ஓமன் நாட்டிற்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக செல்கிறார். இந்தியாவும் ஓமனும் பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவு, வர்த்தகம் மற்றும் இரு நாட்டு மக்களிடையே உறவை கொண்டுள்ளது. இந்த விஜயம் 70 ஆண்டுகால ராஜதந்திர உறவுகளைக் குறிக்கிறது. பிரதமர் மோடியின் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன.

