மாலத்தீவுக்கு ரூ.5,000 கோடி கடன் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
மாலத்தீவுக்கு ரூ.5,000 கோடி கடன் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
UPDATED : ஜூலை 26, 2025 12:47 PM
ADDED : ஜூலை 26, 2025 06:20 AM

மாலே : ''மாலத்தீவுகள், இந்தியாவுக்கு அண்டை நாடு மட்டுமல்ல, சக பயணியாகவும் உள்ளது. அந்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 4,800 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உள்ளோம்,'' என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து நம் அண்டை நாடான மாலத்தீவுக்கு நேற்று சென்றார். அங்கு, இந்தியா - மாலத்தீவுகள் இடையே நட்புறவை மேம்படுத்துவது குறித்து அதிபர் முகமது முய்சுவை சந்தித்து பிரதமர் மோடி நேற்று பேசினார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. இதுதவிர ராணுவம், கடல்சார் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, இச்சந்திப்பின் வாயிலாக புதிய உச்சத்தை தொடும். மாலத்தீவுகளின் உண்மையான நட்பு நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. மாலத்தீவுகளை, இந்தியா தன் அண்டை நாடாக மட்டும் கருதவில்லை; சக பயணியாக கருதுகிறது.
கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும், பேரிடர் காலங்களிலும் மாலத்தீவுகளுடன் முதல் நாடாக இந்தியா எப்போதும் துணைநின்றுள்ளது. மாலத்தீவுகள் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இந்தியா சார்பில் 4,800 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உள்ளது.
இதேபோல் மாலத்தீவுகளின் ராணுவத்தை பலப்படுத்த இந்தியா முழுஒத்துழைப்பு அளிக்கும். ராணுவ நடவடிக்கைகளிலும், பாதுகாப்பு விவகாரங்களிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும். கடல்சார் பாதுகாப்பையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலத்தீவுகளின் 60வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக நம் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதன்பின் பிரதமர் தாயகம் திரும்ப உள்ளார்.