விசாகப்பட்டினத்திற்கு முன்னுரிமை: ஆந்திர அமைச்சர் உறுதி!
விசாகப்பட்டினத்திற்கு முன்னுரிமை: ஆந்திர அமைச்சர் உறுதி!
ADDED : செப் 25, 2024 03:20 PM

விசாகப்பட்டினம்: தொழில் தொடங்குவது, வேலைவாய்ப்பை பெருக்குவதில் விசாகப்பட்டினத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆந்திராவின் கல்வி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் நாரா லோகேஸ் தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில், இந்தியன் தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) ஏற்பாடு செய்திருந்த ஆந்திரா அடிப்படை வசதி குறித்து நடந்த கூட்டத்தில் அமைச்சர் நாரா லோகேஸ் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: ' ஆந்திராவில், ஸ்டீல் நிறுவனம் தனியார் மயம் ஆகப்போகிறது என தவறான தகவலை பரப்பி விடுகிறார்கள்.
ஆந்திராவில், அடுத்த 5 ஆண்டுகளில், முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம், ஐ.டி., துறையின் வளர்ச்சிக்கு திட்டம் வகுத்து வருகிறோம். அதற்காக, புதிய கொள்கைகளை, 100 நாட்களில் கொண்டு வரவிருக்கிறோம்.
பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நேரிடையாக ஆலோசித்து, பிரச்னைகள் ஏதும் இருந்தால் சரிசெய்யவும், மேம்படுத்தவும் திட்டங்களை வகுத்துள்ளோம்.
விசாகப்பட்டினத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிப்போம். வரும் காலங்களில் இங்கு முதலீட்டை பெருக்கி 20 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.